உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலையில் 35 லட்சம் பக்தர்கள் மகாதீப தரிசனம்

Published On 2022-12-10 14:09 IST   |   Update On 2022-12-10 14:09:00 IST
  • பாதுகாப்பு டேக் மூலம் கூட்டத்தில் தொலைந்த 14 குழந்தைகள் மீட்பு
  • அடிப்படை வசதிகள் செய்ய 96 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கடந்த 6-ந் தேதி மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் 35 லட்சம் பக்தர்கள் மகாதீப தரிசனம் செய்தனர்.

கடந்த ஆண்டுகளை விடஅதிக எண்ணிக்கையில் அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தால் செய்து தரப்பட்டது.

176 இடங்களில் குடிநீர் வசதிகள் செய்து தரப்பட்டது. 12 குடிநீர் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. 92 இடங்களில் 330 கழிப்பறைகள் அமைக்கப்பட்டது. 20 செப்டிக் டேங்க் கசடு நீக்கும் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. 1470 எண்ணிக்கையில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டன. 5000 தூய்மை பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்த ஆண்டு முதன் முறையாக அடிப்படை வசதிகளை செயல்படுத்தவும் கண்காணிக்கவும் 96 குழுக்கள் அமைக்கப்பட்டன. குறிப்பாக கிரிவலப் பாதை 14 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குழுக்கள் அமைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மற்றும் பிற பகுதிகளில் இருந்து வருகை தந்த தூய்மை பணிக்காக அமைக்கப்பட்ட குழுவினர் உடனுக்குடன் தூய்மை பணியினை மேற்கொண்டு குப்பைகளை அகற்றியதுடன் கிரிவலப் பாதை உள்ளிட்ட அனைத்து இடங்களையும் தூய்மையாக வைத்திருந்தனர்.

பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து பஸ்கள் 6520 நடைகள் இயக்கப்பட்டு சுமார் 6 லட்சம் பக்தர்கள் பயணம் செய்துள்ளனர். 05.12.2022 முதல் 08.12.2022 வரை 36 சிறப்பு ரயில்கள் உட்பட 75 தடவை இயக்கப்பட்டன. தற்காலிக பஸ் நிலையம் முதல் கிரிவலப் பாதை வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தால் 40 மினி பஸ்கள் மற்றும் 100 தனியார் பஸ்கள் என மொத்தம் 140 பஸ்கள் கட்டனாமின்றி இயக்கப்பட்டது. 101 இடங்களில் அன்னதானம் செய்யபட்டது.

சுமார் 20,52,470 பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது.

மருத்துவ முகாம்களில் 7.5 லட்சம் பக்தர்கள் பயன்பெற்றுள்ளனர். ரூ.7.24 லட்சம் மதிப்பிலான மாத்திரை மருந்துகள் அளிக்கப்பட்டுள்ளது.

20 எண்ணிக்கையில் 108 அவசர ஊர்தி வாகனங்கள், 15 பைக் ஆம்புலன்ஸ் மற்றும் 5 மலையேறும் அவசர கால மருத்துவ குழுக்கள் செயல்பட்டு சுமார் 400 நபர்கள் வரை பயனடைந்துள்ளனர்.

பாதுகாப்பு பணியில் 13,061 காவலர்கள் ஈடுபட்டனர். 85 இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டது. 500 கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் 10 டிரோன் பயன்படுத்தப்பட்டது. 85 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டது. 15,000 குழந்தைகளின் கைகளில் பாதுகாப்பு டேக் கட்டப்பட்டது. இதன் மூலம் கூட்டத்தில் தொலைந்த 14 குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News