கேமராவில் பதிவான காட்சிகள்.
ஓட்டல் மேற்கூரைப் பிரித்து கொள்ளையடித்த 2 பெண்கள்
- சி.சி.டி.வி. காட்சியால் பரபரப்பு
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி டவுன் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் ஆரணி அருகே சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட பைபாஸ் சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
இந்த உணவகத்தில் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உணவக உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் பணி முடிந்ததும் உணவகத்தை முன்பக்கம் மற்றும் பின்பக்க கதவினை பூட்டிக்கொண்டு சென்று விட்டனர்.
இதையடுத்து உணவு உரிமையாளர் வழக்கம்போல் நேற்று காலையில் உணவகத்தை திறந்தார். அப்போது கல்லாப்பெட்டியை பார்த்த போது அதிலிருந்த ரூ.4 ஆயிரம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து ஓட்டலில் பொருத்திருந்த சி. சி. டி. வி. கேமரா காட்சியை ஆய்வு செய்தார்.
அப்போது 2 பெண்கள் நள்ளிரவு 1 மணி அளவில் முகமூடி அணிந்து கொண்டு மேற்கூரையை பிரித்து ஓட்டலின் உள்ளே இறங்கி கல்லாப்பெட்டி யை திறந்து அதில் அதிலிருந்து பணத்தை திருடும் காட்சி பதிவாகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் உரிமையாளர் பிரேம்குமார் இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் திருடும் பெண்கள் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண்களா? என வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சியை கொண்டு பெண்களை தேடி வருகின்றனர்.