உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் பஸ் நிலையத்தில் மேற்கூரை சிமெண்டு பெயர்ந்து விழுந்ததில் பயணி படுகாயம்

Published On 2025-02-13 11:49 IST   |   Update On 2025-02-13 11:49:00 IST
  • பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
  • திருவள்ளூர் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர்:

திருவள்ளூரில் திரு.வி.க பஸ் நிலையம் உள்ளது. இந்தக் கட்டிடம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கிருந்து சென்னை, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பொன்னேரி, பூண்டி, மற்றும் ஆந்திர மாநிலம் காளாஸ்திரி திருப்பதி போன்ற பகுதிகளுக்கு தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் இன்று காலை திருவள்ளூர் பஸ் நிலையத்திற்கு வாணியம்பாடியை சேர்ந்த அப்துல் சலீம் (வயது 59) என்பவர் பஸ் ஏறுவதற்காக வந்தார். அவர் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென பஸ்நிலைய கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்த சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து அப்துல் சலீம் மீது விழுந்தது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற பயணிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதனால் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர், வேடங்கி நல்லூரில் ரூ84 கோடியில் புதிய பஸ்நிலையம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனை உடனடியாக கட்டி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News