உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

எண்ணெய் வித்து பயிர் சாகுபடிக்கான தண்ணீர் திறப்பு தேதியைஅறிவிக்க வேண்டும் - நீர்வளத்துறை அமைச்சருக்கு மனு

Published On 2023-11-25 09:13 IST   |   Update On 2023-11-25 09:13:00 IST
  • பவானிசாகர் அணை தண்ணீர் திறப்பு தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும்
  • ஜனவரி மாதம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து நீர் விடப்படுமா என்ற அச்சம் நிலவி வந்தது.

முத்தூர் :

ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன எண்ணெய் வித்து பயிர் சாகுபடிக்கு பவானிசாகர் அணை தண்ணீர் திறப்பு தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சருக்கு, தமிழ்நாடு அரசு அயலக புலம்பெயர் தமிழர் நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள கீழ்பவானி கால்வாய் பாசனத்தில் பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரில் முதல் முறை மற்றும் 2-வது முறை என்று திட்டம் உள்ளது. இதன்படி அணையில் இருந்து ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 15- ந் தேதி விவசாயிகள் நஞ்சை சம்பா நெல் சாகுபடி செய்வதற்கும், ஜனவரி 5- ந் தேதி எள், நிலக்கடலை, சூரியகாந்தி, மக்காச்சோளம் ஆகிய எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்வதற்கும் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம் ஆகும். இந்த ஆண்டு கடந்த செப்டம்பர் மாதம் நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு தண்ணீர் விடப்பட்ட போது பவானிசாகர் அணையில் நீர் இருப்பு குறைவாக இருந்த காரணத்தினால் 2-வது முறைக்கு விவசாயிகள் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்வதற்கு வழக்கம் போல் ஜனவரி மாதம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து நீர் விடப்படுமா என்ற அச்சம் நிலவி வந்தது.

ஆனால் தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் குறிப்பாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிக அளவில் வரக்கூடிய நீலகிரி மாவட்ட வன பகுதிகளில் கடந்த 2 வார காலமாக நல்ல மழை பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 77 அடியை தாண்டி உள்ளது. இந்த நிலையில் கீழ்பவானி பாசன விவசாயிகளின் அச்சத்தை போக்கும் வகையில் அடுத்த வேளாண்மை சாகுபடிக்கு திட்டமிடல், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இப்பகுதிகளில் தொடங்கப்பட்ட நஞ்சை சம்பா நெல் பயிர் ஆரம்பத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்ட நிலையில் நெல் நாற்று நடவு தள்ளிப்போன காரணம் ஆகியவற்றினால் நீர் தேவையை முன்கூட்டியே திட்டமிடுவதற்கு வருகின்ற 2024-ம் ஆண்டு ஜனவரி 5-ந் தேதி உறுதியாக பவானிசாகர் அணையில் இருந்து 2-வது முறை கீழ்பவானி பாசன எண்ணெய் வித்து பயிர் சாகுபடிக்கு உரிய தண்ணீர் திறப்பு தேதியை உடனடியாக அறிவிக்க ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News