உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வரி விதிப்பு செய்யப்படாத கட்டிட உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

Published On 2023-08-18 10:37 GMT   |   Update On 2023-08-18 10:37 GMT
  • சோதனை அடிப்படையில் நடத்திய ஆய்வில் 350 சதவீதம் விதிமீறல் இருப்பது கண்டறியப்பட்டது.
  • வரி விதிப்புக்கு உட்படுத்தாதவர்களுக்கு கடும் அபராதம் விதித்து வரி வசூலிக்கப்படும்.

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவை இதுவரை மாநகராட்சிக்கு வரி விதிப்புக்கு உட்படுத்தப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதுபோல் வரியை குறைத்து மதிப்பிட்டு செலுத்துவதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 2 வார்டுகளில் சோதனை அடிப்படையில் நடத்திய ஆய்வில் 350 சதவீதம் விதிமீறல் இருப்பது கண்டறியப்பட்டது. வர்த்தக, தொழிற்சாலைகள் இந்த விதிமீறலில் அதிகம் ஈடுபட்டது தெரியவந்தது.

இதன்காரணமாக வரிவிதிப்புக்கு உட்படுத்தப்படாமல் உள்ள வரியினங்கள், குறிப்பாக வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உடனடியாக தாங்களாகவே முன் வந்து மாநகராட்சியில் வரி விதிப்பு செய்து கொள்ள வேண்டும் என்று மேயர் தினேஷ்குமார் ஏற்கனவே அறிவித்தார். வரி குறைத்து மதிப்பிட்டுள்ளவர்களும் உரிய வரியை செலுத்த அந்தந்த பில்கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த மாத இறுதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது. அதன்பிறகு கடும் அபராதம் விதிக்கப்படும் என்று மேயர் எச்சரிக்கை விடுத்தார். இதற்கான பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்கள் பெறும் முகாம்கள் தொடர்ச்சியாக நடந்ததால் செப்டம்பர் மாதம் 15-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது.

அதற்கு பிறகும் வரி விதிப்புக்கு உட்படுத்தாதவர்களுக்கு கடும் அபராதம் விதித்து வரி வசூலிக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட பில்கலெக்டர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்று மேயர் தினேஷ்குமார் எச்சரித்துள்ளார். இதுதவிர தனியார் நிறுவனத்தின் மூலமாக 60 வார்டுகளிலும் வரி விதிப்புக்கு உட்படுத்தாத கட்டிடங்கள், வரி குறைவாக விதிக்கப்பட்ட கட்டிடங்கள் உள்பட அனைத்து கட்டிடங்களிலும் ஆய்வு செய்து விவரங்களை சேகரிக்க உள்ளதாகவும் மேயர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News