உள்ளூர் செய்திகள்

அலகுமலையில் தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகள். 

விநாயகர் சதுர்த்திக்காக தயாராகும் விதவிதமான விநாயகர் சிலைகள்

Published On 2022-08-13 06:18 GMT   |   Update On 2022-08-13 06:18 GMT
  • 10-க்கும் மேற்பட்டவர்கள் இரவு பகலாக சிலைகளை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
  • ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறது.

பல்லடம் :

விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக இந்து முன்னணி சார்பில் கோவை, திருப்பூர், ஊட்டி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பிரதிஷ்டை செய்வதற்காக பல்லடம் அருகே அலகுமலை பகுதியில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த பணியில் 10-க்கும் மேற்பட்டவர்கள் இரவு பகலாக சிலைகளை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிற்பக் கலைஞர்கள் அங்கேயே தங்கி பணிகளை விரைந்து முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் மற்றும் மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் ஆகியோர் கூறியதாவது:-

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. பொது மக்களும் ஆர்வமுடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டு இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறது. 3 அடி முதல் 11 அடி வரை சிலைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் கருட வாகனத்தில் அமர்ந்த விநாயகர், ரத விநாயகர், சித்தி புத்தி விநாயகர், பிள்ளையார்பட்டி விநாயகர், சிவன் பார்வதி விநாயகர் என பல்வேறு வடிவங்களில் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பொருட்களைக் கொண்டு இயற்கையான வண்ணங்கள் தீட்டப்பட்டு சிலைகள் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு அந்தந்த பகுதிகளுக்கு சிலைகள் அனுப்பப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News