உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

சாகுபடி பணிக்காக தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கும் உடுமலை மலைவாழ் மக்கள்

Published On 2023-06-01 05:12 GMT   |   Update On 2023-06-01 05:12 GMT
  • ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.
  • இயற்கை விவசாயத்திற்கு காலங்காலமாக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

உடுமலை :

உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள தளிஞ்சி, தளிஞ்சிவயல், ஆட்டுமலை,ஈசல்தட்டு,பொருப்பாறு, கோடந்தூர், குருமலை, மாவடப்பு, மஞ்சம்பட்டி, கீழானவயல், கருமுட்டி, பூச்சகொட்டாம்பாறை, குளிப்பட்டி, முள்ளுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.

அதுவும் இயற்கை விவசாயத்திற்கு காலங்காலமாக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் குடிநீருக்கு தேவையான தண்ணீரை மலைவாழ் மக்கள் ஆறுகள் மூலமாக பூர்த்தி செய்து கொள்கின்றனர்.நெல், தினை, சாமை, ராகி, இஞ்சி, மரவள்ளி, தென்னை, வாழை, எலுமிச்சை ,பட்டர் பீன்ஸ் உள்ளிட்ட பயிர்கள் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படுகின்றன. வடுமாங்காய்,நெல்லிக்காய், தேன், கடுக்காய், சீமாறு,தைல புல் உள்ளிட்டவை சீசனுக்கு ஏற்றாற்போல் வனப்பகுதியில் இயற்கையாக விளைகின்றன. அது மட்டுமின்றி ஆடு,மாடு,கோழி வளர்ப்பு, தைலம் காய்ச்சுதல், தேன்எடுத்தல் உள்ளிட்ட சுயதொழில்களில் மலைவாழ் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வந்தது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து போனதால் மலைவாழ் மக்களால் விவசாயத் தொழிலில் ஈடுபட முடியவில்லை. மேலும் சுய தொழிலுக்கு உதவிகரமாக இருந்த தைலப்புற்கள், சீமாறு தயாரிக்க பயன்படும் கீற்றுகள் வறட்சியின் காரணமாக கருகிவிட்டது. ஆனால் ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பைக் கொண்டு பிழைப்பு நடத்தி வந்தனர்.

மேலும் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயத் தொழில் தடைபட்டதால் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வந்தது. இதனால் மலைவாழ் மக்கள் கவலை அடைந்தனர்.மேலும் தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து விளை நிலங்களை தயார்படுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்குதல் குறைந்து. இதமான சீதோசன நிலை நிலவுகிறது. அத்துடன் சாகுபடிக்கு தயார் செய்யப்பட்ட நிலங்களும் புத்துணர்வு பெற்று உள்ளது. இதனால் மலைவாழ் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளதுடன் சாகுபடி பணிக்கு தயாராகி வருகின்றனர். தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கினால் விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட காத்திருக்கின்றனர்.

Tags:    

Similar News