பயிற்சியில் பங்கேற்றவர்கள்,
ஆன்லைன் வரி வசூல் குறித்து ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு பயிற்சி
- வருவாய் இனங்களைச் செலுத்துவதற்கு ஏதுவாக http://vptax.tnrd.tn.gov.in/ எனும் இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- 20 கிராம ஊராட்சிகளிலும் தற்போது ஆன்லைன் வரி வசூல் நடைமுறைக்கு வந்துள்ளது.
பல்லடம்:
தமிழ்நாட்டில் அனைத்து கிராம ஊராட்சிகளின் சேவையை கணினி மூலம் செயல்படுத்துமாறு உத்தரவிடபட்டுள்ளது. கிராம பகுதிகளில் பொதுமக்கள் வீட்டு மனைப் பிரிவுகளுக்கான அனுமதி, கட்டிட அனுமதி, தொழிற்சாலைகள் தொடங்க மற்றும் தொழில் நடத்தத் தேவையான அனுமதிகளை எளிதில் பெற ஒற்றைச் சாளர முறையில் இணைய தளம் மூலம் வழங்குவதற்கும், கிராம ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்கள் இணைய வழி மூலம் செலுத்தும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
இதுவரை கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை ஊராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ, ஊராட்சி செயலர் மூலமோ செலுத்த வேண்டி இருந்தது. தற்போது பொதுமக்கள் தங்களது வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களைச் செலுத்துவதற்கு ஏதுவாக http://vptax.tnrd.tn.gov.in/ எனும் இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 20 கிராம ஊராட்சிகளிலும் தற்போது ஆன்லைன் வரி வசூல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நிலையில்,ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் செயலர்களுக்கு ஆன்லைன் வரி வசூல் குறித்த பயிற்சி வகுப்பு பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் தலைமை தாங்கினார் . ஆன்லைன் மூலம் வரி வசூல் செய்வது குறித்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புருஷோத்தமன் விளக்கம் அளித்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலர்கள் கலந்துகொண்டு தங்களது சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றனர்.