பழுதாகி நின்ற லாரி.
பல்லடத்தில் நடுரோட்டில் பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு
- வளைவில் திரும்ப முயற்சித்த போது பிரேக் டவுன் ஆகி நின்றது.
- அண்ணா சிலை உள்ள பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்படவில்லை.
பல்லடம்:
பல்லடத்தில் அண்ணா சிலை அருகே கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை திருப்பூரில் இருந்து கோவை நோக்கி சென்ற சரக்கு லாரி ஒன்று அங்குள்ள வளைவில் திரும்ப முயற்சித்த போது பிரேக் டவுன் ஆகி நின்றது. ஓட்டுநர் எவ்வளவோ முயன்றும் லாரியை எடுக்க முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்து வந்த பல்லடம் போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார், கிரேன் எந்திரம் உதவியுடன் அங்கிருந்து லாரியை அப்புறப்படுத்தினர். லாரி பழுதடைந்து நின்றதால் அந்தப் பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
இது குறித்து தன்னார்வலர்கள் கூறுகையில்:-
கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனாலும் அண்ணா சிலை உள்ள பகுதியில் போதிய விரிவாக்கம் செய்யப்படவில்லை. கேட்டால் தனியார் இடம் என்று நெடுஞ்சாலை துறையினர் கூறுகின்றனர். தனியார் இடம் என்றாலும் பொதுமக்கள் வசதிக்காக சாலை விரிவாக்க பணி செய்வதற்கு எவ்வளவோ இடங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் அண்ணா சிலை வளைவு அருகே உள்ள இடங்களை சாலை விரிவாக்க பணிக்கு நெடுஞ்சாலைத்துறையினர் கையகப்படுத்தி விரிவாக்கம் செய்ய வேண்டும். ஏனென்றால் அந்த இடத்தில் தான் வாகனங்கள் திரும்ப முடியாமல் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.