உள்ளூர் செய்திகள்

முகவரி தெரியாமல் தவித்த மூதாட்டிக்கு உதவிய பொதுமக்கள்

Published On 2023-01-23 16:51 IST   |   Update On 2023-01-23 16:51:00 IST
சரியான முகவரி தெரியாததால் ஆறுமுத்தாம்பாளையம் பள்ளி முன்பு அமர்ந்துள்ளார்.

பல்லடம்:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடசித்துரைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மனைவி பொன்னம்மாள்(வயது 82). இவரது கணவர் பழனிச்சாமி 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில், கோவிலில் தங்கி அங்கு தூய்மை பணியாளராக பணியாற்றி, வந்த அவரிடம் அவரது சகோதரி 25 ஆயிரம் கடன் வாங்கியிருந்ததாகவும், தற்போது பணம் தேவைப்படுவதால், பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையத்தில் வசிக்கும் அவரது சகோதரியை தேடி வந்துள்ளார்.

இந்த நிலையில், சரியான முகவரி தெரியாததால் ஆறுமுத்தாம்பாளையம் பள்ளி முன்பு அமர்ந்துள்ளார். நீண்ட நேரமாக மூதாட்டி ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்ட அந்த வழியே சென்ற கவுன்சிலர் முத்துக்குமார் மற்றும் பொதுமக்கள் மூதாட்டியிடம் விசாரித்துள்ளனர். அவர்களிடம் சகோதரியை தேடி வந்தது குறித்து கூறியுள்ளார்.

இதையடுத்து பொன்னம்மாளை அவரது சகோதரி வீட்டிற்கு அழைத்து சென்றனர். பின்னர் அவருக்கு உணவும், பணம் ரூ.2 ஆயிரமும் அவரது சகோதரி வழங்கியுள்ளார். அதனை பெற்றுக் கொண்டு மனிதாபிமானத்துடன் உதவிய பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார்.

Tags:    

Similar News