உள்ளூர் செய்திகள்

மேயர் வந்திருக்காரு, அதிகாரிகள் வர மாட்டாங்களா? - கல்வித்துறை அதிகாரிகளுடன் கவுன்சிலர்கள் வாக்குவாதம்

Published On 2023-08-02 11:04 GMT   |   Update On 2023-08-02 11:04 GMT
  • நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி முகாம் நடைபெற்றது.
  • மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபட்டனர்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , துணை மேயர் பாலசுப்ரமணியம் , மண்டல தலைவர்கள் , மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை சார்பில் முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதனால் மாநகராட்சி கவுன்சிலர்கள் பயிற்சி முகாமிற்கு வந்திருந்த பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி சார்பில் மேயர், துணை மேயர் , மண்டல தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் வந்திருக்கக் கூடிய நிலையில் பள்ளி கல்வித்துறை சார்பில் உயர் அதிகாரிகள் யாரும் ஏன் வரவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிகழ்ச்சி ஒரு வாரத்திற்கு முன்னதாகவே திட்டமிட்ட நிலையில் திடீரென முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னையில் ஆய்வு கூட்டம் தேதி குறிக்கப்பட்டதால் அங்கு சென்று விட்டதாக அதிகாரிகள் தெரிவித்து மாமன்ற உறுப்பினர்களை சமரசம் செய்தனர்.

இதன் பின்னர் பள்ளி மேலாண்மை குழுவின் உரிமைகள் மற்றும் மேம்படுத்த வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளித்தனர். இதில் மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபட்டனர்.

Tags:    

Similar News