உள்ளூர் செய்திகள்

கத்தாங்கன்னி குளம் நிரம்பிய காட்சி.

24 ஆண்டுகளுக்கு பிறகு கத்தாங்கன்னி குளத்தில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் - விவசாயிகள்-பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2022-08-15 06:12 GMT   |   Update On 2022-08-15 06:12 GMT
  • 120 ஏக்கர் வரை நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது‌.
  • 24 ஆண்டுகளுக்கு முன் மழைநீரால் முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறி உள்ளது.

காங்கயம் :

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள கத்தாங்கன்னி பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் கத்தாங்கன்னி குளம் அமைந்துள்ளது‌. கொங்கு சோழர்கள் ஆட்சி காலத்தில் இக்குளம் வெட்டப்பட்டு, நொய்யல் ஆற்றில் அணைப் பாளையம் அருகே கற்களால் கட்டப்பட்ட தடுப்பணை மூலம் பருவமழை காலத்தில் நொய்யல் ஆற்றில் வரும் வெள்ள நீரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாய்க்கால் வெட்டி குளத்துக்கு தண்ணீர் கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் பாசனத்துக்கு அப்போது தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இக்குளத்தின் மூலம் சுமார் 120 ஏக்கர் வரை நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது‌.

பல நூற்றாண்டு பழமை வாய்ந்த கத்தாங்கன்னி குளம் இறுதியாக கடந்த 24 ஆண்டுகளுக்கு முன் மழைநீரால் முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறி உள்ளது. திருப்பூர் தொழில் வளர்ச்சி காரணமாக சாய நீர் தொடர்ச்சியாக சுத்திகரிப்பு செய்யாமல் நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டதால், ஆற்றின் மூலம் நீர் பெறும் குளங்கள் மற்றும் பாசன நிலங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானது. இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுபடி கடந்த 2009-ஆம் ஆண்டு குளங்களுக்கு நீர் செல்வதை தடுக்க நொய்யல் தடுப்பணைகள் உடைக்கப்பட்டு குளத்துக்கு நீர் வருவது தடுக்கப்பட்டது.

கடந்த 2010 க்கு பின் குளங்களுக்கு தண்ணீர்‌ திறக்கப்படாமல் இருந்த நிலையில், திருப்பூர் சாய ஆலைகள் பூஜ்ஜிய சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சாய தண்ணீரை சுத்திகரிப்பு செய்து மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதனால் நொய்யல் ஆற்றில் சாய நீர் கலப்பது குறைந்தது. இதனை அடுத்து மழைக்காலங்களில் நொய்யல் ஆற்றில் வரும் மழை நீரை குளங்களுக்கு திறக்கக் கோரி விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை அடுத்து கடந்த சில ஆண்டுகளாக நொய்யலில் வரும் வெள்ள நீரின் டிடிஎஸ்.ஐஅளவீடு செய்து, மழைநீர் தற்போது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களுக்கு விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக மழை நீர் சென்று கொண்டிருக்கும் நிலையில்,நொய்யல் ஆற்றின் மூலம் நீர் நிரம்பும் வகையில் 23 தடுப்பணைகள் வழியாக 31 குளங்களுக்கு தண்ணீர் சென்று வருகிறது.

இதில் இறுதி 31-வது குளமான கத்தாங்கன்னி குளத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து மழைநீர் திறக்கப்பட்டதால் குளத்தின் மொத்த உயரமான 18 அடியை நோக்கி நீர் வேகமாக நிரம்பி வந்தது.நேற்று காலை குளம் முழுமையாக நிரம்பியதை அடுத்து, வெள்ளப் போக்கி பகுதி வழியாக 24 ஆண்டுக்கு பின் உபரி நீர் வெளியேறியது. இதனை தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் உபரி நீர் வெளியேறுமிடத்தில் மலர் தூவி தண்ணீருக்கு மரியாதை செய்தனர். பல ஆண்டுக்கு பின் கத்தாங்கன்னி குளம் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதை சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் ஆச்சர்யமாக பார்த்து செல்கின்றனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயி பொன்னுசாமி கூறுகையில், பல ஆண்டுக்கு பின் மழை நீரால் குளம் முழுமையாக நிரம்பி வழிகிறது. இதன் மூலம் இப்பகுதியில் பருத்தி, மக்காச்சோளம், சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிரிட உள்ளோம். குளம் முழுமையாக நிரம்பி வழிவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News