ஜெயலலிதா நினைவு நாளையொட்டி மவுன ஊர்வலம்- அஞ்சலி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
- திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படுகிறது.
- சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் இன்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். அவைத் தலைவர் பழனிச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், விஜயகுமார் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வருகிற 5 -ந்தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி திருப்பூர் ரெயில் நிலையத்திலிருந்து மௌன ஊர்வலம் புறப்பட்டு திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படுகிறது.
இதில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொள்வது,அதேபோல் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளபடி வருகிற 9, 13, 14, தேதிகளில் தி.மு.க. அரசை கண்டித்தும் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு ,பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு ,சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். அதைப்போல் மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பூத் கமிட்டி அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநகர் மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, குமார், கே.பி.ஜி மகேஷ்ராம், ஹரிஹரசுதன், திலகர் நகர் சுப்பு, கே.பி. முத்து, மற்றும் அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான் ,அணி செயலாளர்கள் சதீஷ் ,கலைமகள் கோபால்சாமி, அட்லஸ் லோகநாதன், கே.பி.என். பழனிச்சாமி, ஆண்டவர் பழனிச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .