உள்ளூர் செய்திகள்

கண்காட்சியை பெற்றோர்களுடன் திருப்பூர் வடக்கு வட்டார கல்வி அதிகாரி முஸ்ரத் பேகம் பார்வையிட்ட காட்சி.

நெருப்பெரிச்சல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Published On 2022-11-24 12:08 IST   |   Update On 2022-11-24 15:20:00 IST
  • 2 நாட்கள் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
  • இல்லம் தேடி கல்வி உறுப்பினர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 அனுப்பர்பாளையம் :

திருப்பூர் மாநகராட்சி 4-வது வார்டுக்குட்பட்ட நெருப்பெரிச்சல் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 2 நாட்கள் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. தொடக்க விழா நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலா வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அசோக்குமார், பாண்டியன்நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜோசப் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.இதில் திருப்பூர் வடக்கு வட்டார கல்வி அதிகாரி முஸ்ரத் பேகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.

இந்த கண்காட்சியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் காற்றாலை மூலம் மின் உற்பத்தி, மருத்துவ தாவரங்கள், விவசாயம், மக்கும் குப்பை, மக்காத குப்பை, மூலிகை, தானிய வகைகள் மற்றும் இயற்கை உணவு வகைகள் உள்பட அறிவியல் சார்ந்த 100-க்கும் மேற்பட்ட படைப்புகளை கண்காட்சியில் காட்சிப்படுத்திய மாணவர்கள், அவற்றின் செயல்பாடு மற்றும் பயன்கள் குறித்து விளக்கி கூறினார்கள். இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி உறுப்பினர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் கண்காட்சியை பார்வையிட்டனர். கொரோனாவுக்கு பிறகு மாணவர்களின் அறிவு மற்றும் கல்வித்திறனை வளர்க்கும் நோக்கில் இந்த கண்காட்சி நடத்தப்படுவதாக தலைமையாசிரியை நிர்மலா தெரிவித்தார். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கண்காட்சியை குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கண்டு களித்தனர்.

Tags:    

Similar News