உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

6 உழவர் சந்தைகளில் காய்கறி, பழங்கள் ரூ.310 கோடிக்கு விற்பனை - கலெக்டர் தகவல்

Published On 2023-06-15 04:58 GMT   |   Update On 2023-06-15 04:58 GMT
  • காய்கறிகள் மற்றும் பழங்கள் என ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் மதிப்பில் விற்பனை நடக்கிறது.
  • 13 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, பல்லடம், தாராபுரம், காங்கயம், உடுமலை ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு 600 முதல் 645 விவசாயிகள், 145 முதல் 163 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் என ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் மதிப்பில் விற்பனை நடக்கிறது. இதன் மூலம் 13 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

உழவர் சந்தைகள் தொடர்பாக கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறும்போது, 'உழவர் சந்தையில் காய்கறி, பழங்களை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 485 விவசாயிகள் பழைய அட்டைகளை புதுப்பிக்க ஆவணங்கள் பெறப்பட்டு ஆய்வு நடக்–கிறது. 939 பழைய அட்டைகளின் ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் வடக்கு உழவர் சந்தையில் உள்ள குளிர்பதன கிடங்கில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை 6 ஆயிரத்து 743 கிலோ காய்கறிகள் இருப்பு வைத்து 284 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். நடமாடும் உழவர் சந்தை திட்டத்தில் 6 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மானியம் வழங்கி நான்கு சக்கர வாகனங்களில் காய்கறி, பழங்கள் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகள் மூலமாக ரூ.310 கோடி மதிப்புள்ள 1 லட்சத்து 13 ஆயிரத்து 447 டன் அளவு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 லட்சத்து 55 ஆயிரம் விவசாயிகளும், 1 கோடியே 10 லட்சத்து 93 ஆயிரம் நுகர்வோரும் பயனடைந்துள்ளனர் என்றார்.

Tags:    

Similar News