தீபாவளி சீட்டு நடத்தி பண மோசடி செய்தவரின் வீட்டை பொதுமக்கள் முற்றுகை
- குமார் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக சீட்டு நடத்தி வந்தார்.
- தீபாவளிபண்டிகைக்கு முன்பு, குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.
திருப்பூர் :
திருப்பூர் தாராபுரம் ரோடு சந்திராபுரம்,பாரதிநகர் பகுதியை 200-க்கும் மேற்பட்டவர்கள் புதூர் பிரிவில் மளிகைகடை வைத்து நடத்தி வந்த குமார் என்பவரிடம் பலகாரசீட்டுக்கு பணம் செலுத்தி வந்துள்ளனர். அவர் கடந்த 15 ஆண்டுகளாக சீட்டு நடத்தி வந்தார். இதனால் நம்பிக்கையின் அடிப்படையில் அவரிடம் பணம் செலுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையின் போது முதிர்வு தொகையை அவர் கொடுக்க வேண்டும். ஆனால் தீபாவளிபண்டிகைக்கு முன்பு, குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவரை செல்போனில் தொடர்பு கொண்டால் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருக்கிறது.
இதனையடுத்து தங்களிடம் மோசடி செய்து தலைமறைவான குமாரை கைது செய்து எங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து நேற்று மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலை குமாரின் வீட்டு முன்பு முற்றுகையிட்டனர். மேலும் தங்களது பணத்தை போலீசார் மீட்டுக் கொடுக்க வேண்டும் என கோசங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.