வீட்டுமனை பட்டா வேண்டும் என்று பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி.
அவினாசி அருகே வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் போராட்டம்
- அம்பேத்கர் நற்பணி மன்றம் என்ற பதாகை வைத்து தனித்தனியாக குச்சிகளை நட்டு சாலை அமைப்பதற்கு முயன்றனர். .
- வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் நம்பியாம்பாளையம் ஊராட்சி எ.டி.காலனியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் 40 பெண்கள் உள்ளிட்ட 60 க்கு மேற்பட்டோர் அப்பகுதியில் உள்ள 99/3 என்புறம்போக்கு இடத்தில் அம்பேத்கர் நற்பணி மன்றம் என்ற பதாகை வைத்து வீட்டுமனை பட்டா வேண்டும் என்று அவர்கள் தனித்தனியாக குச்சிகளை நட்டு சாலை அமைப்பதற்கு முயன்றனர்.
இது பற்றி அவர்கள் கூறுகையில், நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறோம்.எங்களுக்கு குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லை. ஏற்கனவே வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே இங்கு பட்டா கேட்டு வந்துள்ளோம் என்றனர். தகவல் அறிந்து அவினாசி தாசில்தார் ராஜேஸ், கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி, உதவியாளர் நடராஜ், அவினாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து அவர்களிடம் இது குட்டை புறம்போக்கு இடம். இங்கு வீட்டுமனை பட்டா தருவதற்கு சாத்தியமில்லை .வேறு இடம் பார்த்து தருவதாக கூறினர். ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்து பலகாலமாக எங்கள் மூதாதையர் இங்கு குடிசை போட்டு வாழ்ந்துள்ளனர். எனவே இந்த இடத்தில் எங்களுக்கு வீட்டுமனை பட்டா வேண்டும் என்று நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் வருவாய்துறையினரும் போலீசாரும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி அவசியம் வேறு நல்ல இடத்தில் வீட்டுமனை பட்டா தருவதாக வலியுறுத்தி கூறிய பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.