சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
வேகத்தடை அமைக்க கோரி பல்லடத்தில் பொதுமக்கள் சாலை மறியல்
- சபியுல்லாவை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சபியுல்லா இறந்து விட்டதாக தெரிவித்தார்.
- நெடுஞ்சாலை துறையினரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் வேகத்தடை அமைக்கவில்லை.
பல்லடம்:
கிருஷ்ணகிரியை சேர்ந்தமுகமதுஅமிர் என்பவர் மகன் சபியுல்லா (வயது 37). இவர் கடந்த சில வருடங்களாக பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அதே பகுதியில் இரு சக்கர வாகன பழுது பார்ப்பு ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று பல்லடம்- செட்டிபாளையம் சாலையில் சின்னிய கவுண்டம்பாளையத்திற்கு செல்வதற்காக மின்சார மோட்டார் சைக்கிளில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
சின்னிய கவுண்டம்பாளையம் பிரிவு அருகே செல்லும்போது, எதிரே மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னாள் சென்ற ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு, அப்படியும் நிற்காமல் எதிரே வந்த சபியுல்லா ஓட்டி வந்த மின்சார மோட்டார் சைக்கிள் மீது மோதியது இதில் அவர் தூக்கி வீசப்பட்டு ரோட்டில் விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம்ஏற்பட்டது. இதை எடுத்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை சபியுல்லா பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சபியுல்லா இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து அவரது மனைவி அம்மு கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் காரை ஓட்டி வந்த கேரளாவைச் சேர்ந்த சேது என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே சின்னிய கவுண்டம்பாளையம் பிரிவில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது என்றும் அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலை துறையினரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் வேகத்தடை அமைக்க வில்லை என்று கூறி விபத்து ஏற்பட்ட இடத்தில் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தற்காலிகமாக சாலை தடுப்புகள் வைத்தனர். இதை யடுத்து அங்கிருந்து பல்லடம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் வேகத்தடை அமைக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர் இதனால் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.