உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

ஒரே ஆண்டில் 3-வது முறையாக விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தம் - 4 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பு

Published On 2022-09-17 06:48 GMT   |   Update On 2022-09-17 06:49 GMT
  • ஆண்டுக்கு 6 சதவிகிதம் மின் கட்டணம் உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.
  • வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுவர்.

மங்கலம்:

தமிழகத்தில் சாதாரண விசைத்தறி கூடங்களுக்கு மின் கட்டணம் பெரும் சுமையாக இருந்த காரணத்தினால் பல்வேறு போராட்டங்கள் நடத்தி சிறு குறு தொழில் பிரிவிலிருந்து தனியாக பிரித்து, தனி வகைப்பாட்டில் மின் கட்டணம் (டேரிப்) நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில் தற்பொழுது தமிழக அரசு அனைத்து வகை பிரிவுக்கும் 30 சதவிகித மின்கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. மேலும் ஆண்டுக்கு 6 சதவிகிதம் மின் கட்டணம் உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி தொழில் என்பது நேரடியான பாவு நூலை பெற்று அதனை கூலிக்கு மட்டுமே நெய்து தரக்கூடிய வகையில் விசைத்தறியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக பெரிய அளவில் வருமானம் இல்லாத சூழலில் தொழில் செய்து வருகின்றனர். 5லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்வாதாரம் பெற்று வரும் தொழிலாக விசைத்தறி தொழில் அமைந்துள்ளது.

இத்தகைய விசைத்தறி உரிமையாளர்களுக்கு மின் கட்டண உயர்வு கடுமையான இழப்பை ஏற்படுத்தும் என்பதுடன், தொழிலை மேற்கொண்டு நடத்த முடியாத சூழலுக்கு தள்ளப்படும் நிலை இருப்பதால் மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதில் 30 சதவிகித மின்கட்டணத்தையும் ஆண்டுக்கு 6 சதவிகித கட்டண உயர்வையும் முழுமையாக விலக்களித்து அறிவிக்கும் வரை 2 லட்சம் விசைத்தறிகளை நிறுத்தியுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுவர்.

ஏற்கனவே ஜவுளி உற்பத்தியாளர்கள் உயர்த்தப்பட்ட கூலி உயர்வு அளிக்காததை கண்டித்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் 39 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கடந்த ஜூன் மாதம் நூல் விலை உயர்வைக் கண்டித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் 10 நாட்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டில் 3-வது முறையாக வேலைநிறுத்தம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக நாளொன்றுக்கு ஒரு கோடி மீட்டர் துணி உற்பத்தி பாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் லட்சக்கணக்கானோரின் குடும்பங்களிலும் வேலை இல்லாமல் நிதி நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. 

Tags:    

Similar News