உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து பெட்டகத்தினை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கிய காட்சி.  

படியூரில் விரைவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்

Published On 2023-11-26 08:16 GMT   |   Update On 2023-11-26 08:17 GMT
  • முகாமை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
  • தமிழ்நாடு முதலமைச்சரிடம் படியூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம்

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வள்ளியரச்சல் ஊராட்சி, கணபதிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் காங்கயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீரனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவமுகாம் நடந்தது. இதற்கு தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன் தலைமை தாங்கினார். முகாமை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:- வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், வள்ளியரச்சல் ஊராட்சி, கணபதிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் காங்கயம் ஊராட்சி ஒன்றியம், கீரனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரிடம் படியூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம். உடனடியாக அதற்கு தீர்வு காணப்பட்டு இந்த இடத்திலேயே மருத்துவம் பெறக்கூடிய வகையில் ஆரம்ப சுகாதார மையம் அமையவுள்ளது.

அதனைத்தொடர்ந்து சிவன்மலை ஊராட்சியில் விளையாட்டு மைதானம் மற்றும் உள்விளையாட்டு அரங்கம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 6 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. குடிநீர் மேல்நிலை தொட்டிகள், சாலை வசதிகள் போன்ற எண்ணற்ற பணிகள் அரசின் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும், 11 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், 2 பெண்களுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகங்களையும் வழங்கினார். இதில் வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி, காங்கயம் வட்டார மருத்துவ அலுவலர் முரளி, கீரனூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் அய்யனார், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள், பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News