உள்ளூர் செய்திகள்

கோ பூஜை நடைபெற்ற காட்சி.

பல்லடம் செல்வ விநாயகர் கோவிலில் கோ பூஜை

Published On 2023-09-29 09:26 GMT   |   Update On 2023-09-29 09:26 GMT
  • செல்வ விநாயகர் கோவிலில் திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டு கோவில் பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டது.
  • அத்தி மரத்தால் செய்யப்பட்ட செல்வ விநாயகர், பாலதண்டபாணி, சுவாமி சிலைகள், கோவில் அருகே தற்காலிகமாக இரும்பு தகடுகள் மூலம் அறை அமைக்கப்பட்டு அங்கு சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பல்லடம்:

பல்லடம் காந்தி ரோட்டில் செல்வ விநாயகர், பாலதண்டபாணி கோவில் உள்ளது. சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கோவிலில் நீண்ட காலமாக கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வ விநாயகர் கோவிலில் திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டு கோவில் பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டது.

பின்னர் திருப்பணி செய்ய பாலாலய பூஜை நடைபெற்றது.இதை தொடர்ந்து சுவாமி சிலைகள் கோவிலில் இருந்து எடுக்கப்பட்டு, அருகே உள்ள பொன்காளியம்மன் கோவிலில், தனி அறையில் பாதுகாப்புடன் சுவாமி சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பக்தர்கள் வழிபடுவதற்காக அத்தி மரத்தால் செய்யப்பட்ட செல்வ விநாயகர், பாலதண்டபாணி, சுவாமி சிலைகள், கோவில் அருகே தற்காலிகமாக இரும்பு தகடுகள் மூலம் அறை அமைக்கப்பட்டு அங்கு சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கோவில் கட்டுவதற்கு முன் அங்கு பாசிப்பயிர், கம்பு, ராகி உள்ளிட்ட பயிர்களை வளர்த்து அதனை கால்நடைகளை விட்டு மேய விட வேண்டும் என்பது ஐதீகம். இதன்படி செல்வ விநாயகர் கோவிலில் கோ பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் கோவில் கட்டப்பட உள்ள இடத்தில் மாடுகள், மற்றும் குதிரை ஆகியவற்றை விளைந்த தானிய பயிர்களை மேய விட்டனர்.

இதுகுறித்து திருப்பணி குழுவினர் கூறுகையில், செல்வ விநாயகர், பால தண்டபாணி திருக்கோவில் கட்டுவதற்காக அரசின் ஸ்தபதியிடம் கட்டுமான வரைபடம் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். கட்டுமான வரைபடம் வந்தவுடன் அதனை அரசின் ஒப்புதல் பெற்று விரைவில் திருப்பணிகள் துவங்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.நீண்ட காலமாக திருப்பணி நடைபெறாமல் இருந்த செல்வ விநாயகர், தண்டபாணி கோவிலில் தற்பொழுது திருப்பணிகள் நடைபெறுவது பல்லடம் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News