உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

விவசாயிகள் கடன்கள் பெற்று பயன் அடையலாம்- கூட்டுறவு இணைப்பதிவாளர் அறிவிப்பு

Published On 2022-06-06 11:19 GMT   |   Update On 2022-06-06 11:19 GMT
  • ஆதரவற்ற விதவைகளுக்கான கடன் போன்ற அனைத்து விதமான கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது.
  • விவசாயிகளுக்கு தேவையான உரங்களை சில்லரை விற்பனை மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டதொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பல்வேறு கடன்கள் வழங்கப்படுகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத், கூட்டுறவு சங்கத்தின் திருப்பூர் மண்டல இணைப்பதிவாளர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன். கால்நடை பராமரிப்பு கடன், மாற்றுத் திறனாளிகளுக்கான கடன், குறைந்த வட்டியில் சுயஉதவிக்குழு கடன், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கடன் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகளில் விதவைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கான கடன் போன்ற அனைத்து விதமான கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது.

அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையுடன் பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்ட விவசாயிகள் ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல், நிலவுடைமை தொடர்பான கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பாக வி.ஏ.ஓ . அடங்கல் சான்று. பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி கடன் மனு சமர்ப்பித்து, பயிர்க்கடன் மற்றும் இதரக் கடன்கள் பெற்று பயனடையலாம்.

சென்ற ஆண்டில் 49,671 விவசாயிகளுக்கு ரூ.509.14 கோடி அளவிற்கு பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிர்க்கடன்களை உரிய தேதியில் திருப்பி செலுத்தினால் வட்டிச் சலுகை வழங்கப்படுகிறது. வட்டியில்லா பயிர்கடன்களை அனைத்து விவசாயிகளும் பெற ஏதுவாக கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தை பெற்று ரூ.110 பங்குத் தொகை மற்றும் நுழைவுக் கட்டணம் செலுத்தி உடன் உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் மனுவை சமர்ப்பித்து, அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம்.

சங்கத்தின் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத விவசாயிகளுக்கு தேவையான உரங்களை சில்லரை விற்பனை மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதில் ஏதாவது சேவை குறைபாடுகள் இருந்தால் திருப்பூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் 0421-2971184, திருப்பூர் சரக துணைப்பதிவாளர் அலுவலகம் 0421-2216355, தாராபுரம் சரக துணைப்பதிவாளரை 04258-221795 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

Tags:    

Similar News