இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை- கள்ளக்காதலனுக்கு போலீஸ் வலைவீச்சு
- கோபம் அடைந்த முத்துலட்சுமி, அஜித்துடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்தை வலைவீசி தேடி வருகின்றனர்.
பல்லடம்:
நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்தவர் சிவரஞ்சித் (வயது27).
இவரது மனைவி முத்துலட்சுமி (23). இவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது.
இவர்கள் தற்போது திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்த சோழியப்பகவுண்டன் புதூர் என்ற பகுதியில் குடியிருந்து வேலைக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் முத்துலட்சுமிக்கு திசையன்விளை பகுதியைச் சேர்ந்த அஜித் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து அஜித் முத்துலட்சுமியை போனில் அழைத்து தன்னுடன் வாழ வருமாறு வற்புறுத்தி உள்ளார்.
இதனால் கோபம் அடைந்த முத்துலட்சுமி, அஜித்துடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அஜித் மீண்டும் முத்துலட்சுமிக்கு போன் செய்து தன்னுடன் வாழ வரவில்லை என்றால் நாம் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை உனது கணவருக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டியுள்ளார்.
அதன்பின் இருவரும் இருக்கும் போட்டோவை முத்துலட்சுமியின் கணவருக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இதனால் அவர்களது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதில் மனமுடைந்த முத்துலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அறிந்ததும் அவினாசிபாளையம் போலீசார் அங்கு சென்று, முத்துலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்தை வலைவீசி தேடி வருகின்றனர்.