உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூர் மாநகரில் நுண்ணறிவு போலீசார் அதிரடி இடமாற்றம் - கமிஷனர் பிரபாகரன் நடவடிக்கை

Published On 2022-09-15 08:18 GMT   |   Update On 2022-09-15 08:18 GMT
  • மாநகர, மாவட்ட போலீஸ் என இரு பிரிவுகளாக உள்ளது.
  • ஸ்டேஷன் போலீசாரின் நடவடிக்கையை கண்காணித்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளிப்பது வழக்கம்.

திருப்பூர் :

திருப்பூர் மாநகர போலீசில், நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வந்த போலீசாரை இடமாற்றம் செய்து திருப்பூர் போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். திருப்பூர் மாவட்டத்தில் மாநகர, மாவட்ட போலீஸ் என இரு பிரிவுகளாக உள்ளது. மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீஸ் நிலையம் வாரியாக நுண்ணறிவு பிரிவு போலீசார் பணியாற்றி வருகின்றனர். அந்தந்த காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நடக்கும் ஆர்ப்பாட்டம், போராட்டம், சட்டவிரோத செயல்கள், ஸ்டேஷன் போலீசாரின் நடவடிக்கை உள்ளிட்டவற்றை கண்காணித்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளிப்பது வழக்கம்.

இப்பிரிவு முழுமையாக, போலீஸ் கமிஷனரின் கட்டுப்பாட்டில் செயல்படும்.நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வரும் போலீசாரை இடமாற்றம் செய்ய சமீபத்தில் பட்டியல் தயார் செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா காரணமாக இடமாற்றம் செய்யப்படாமல் இருந்தது.இச்சூழலில், ஐ.எஸ்., பிரிவில், அலுவலக, ஸ்டேஷன் பணியை மேற்கொண்டு வந்த நிவாஸ் சக்கரவர்த்தி, ரகுபதி, கணேஷ்குமார், பிரபு, பிரகாஷ், குப்புசாமி, ஜான் பிரவின், சத்யமூர்த்தி, சார்லி என 9 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து தெற்கு, திருமுருகன்பூண்டி, வீரபாண்டி, நல்லூர், அனுப்பர்பாளையம், வடக்கு ஆகிய ஸ்டேஷன்களை சேர்ந்த பூபதி, கார்த்திகேயன், ஜெயசந்திரன், பாலசுப்ரமணியன், குமார், நாகேந்திரன், சதீஷ்குமார் ஆகியோரை ஐ.எஸ்., பிரிவுக்கு மாற்றி கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News