கோப்புபடம்
ஜமாபந்தி மனுக்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
- வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, ,மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாறுதல்,உள்ளிட்ட 819 மனுக்கள் பெறப்பட்டது.
- பொதுமக்கள் கொடுத்த மனுவில் கரடிவாவி சின்ன குட்டை பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் வருவாய் வட்டத்தில் 1432ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி ) பல்லடம் தாலுகா அலுவலகத்தில்,திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவகுமார் முன்னிலையில் கடந்த 23ந் தேதி துவங்கி நேற்று 26ம் தேதிவரை நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.இதில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, ,மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாறுதல்,உள்ளிட்ட 819 மனுக்கள் பெறப்பட்டது.
இவற்றில் 80 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும்,737 மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாகவும்,2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் வருவாய்த்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இந்த ஜமாபந்தியின் போது,பல்லடம் கல்லம்பாளையம் பகுதியில் வழித்தட பிரச்சினையில 36 பனை மரங்கள் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி விவசாயி வடிவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் பனம் பழங்களுடன் வந்து புகார் மனு அளித்தனர்.மேலும் பல்லடம் தீயணைப்பு நிலையத்தை, மேம்படுத்தி அதிநவீன புதிய தீயணைப்பு வாகனங்கள் வழங்க வேண்டும் என்றுமனு அளிக்கப்பட்டது.
இதே போல கரடிவாவி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கரடிவாவி சின்ன குட்டை பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டது. ஆனால் கட்டிட இடிப்பாடுகள் முறையாக அகற்றப்படாமல் உள்ளதால், குட்டையில் மழை நீர்தேங்குவதில் தடை ஏற்பட்டுள்ளது. எனவே கட்டட இடிபாடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதே போல பல்லடம் பச்சாபாளையம் விநாயகர் கோவில் அருகே உள்ள பொதுக் கிணற்றை சுத்தம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும், தெரு விளக்குகள் அமைக்க வேண்டும் எனவும் மனு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து கோரிக்கை மனுக்களையும் முழுமையாக ஆய்வு செய்து தகுதியுடைய மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு காண வேண்டும் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்த நிகழ்ச்சியில் பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவகுமார்,பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், பல்லடம் துணை தாசில்தார் சுப்பிரமணியம், மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.