உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

அத்திக்கடவு-அவினாசி திட்ட குளங்களில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகள்

Published On 2022-12-30 16:10 IST   |   Update On 2022-12-30 16:10:00 IST
  • 24 மாதங்களில் முடிய வேண்டிய பணி 36 மாதம் ஆகியும் நிறைவு பெறாத நிலை உள்ளது.
  • குளத்தில் அத்திக்கடவு நீர் நிரப்பப்பட்டால் அத்துடன் கழிவு நீர் கலக்காமல் இருக்க உரிய வசதிகள் செய்யப்படவில்லை.

அவிநாசி:

60 ஆண்டு காலமாக போராடி பெற்ற அத்திக்கடவு-அவிநாசி திட்டம் மூலம் தண்ணீர் வந்தாலும், அவற்றை தேக்கி வைக்க வேண்டிய குளங்கள் குப்பை கிடங்காக மாறியுள்ளதால் பயன் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் போதுமான பருவ மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிகளுக்கு கீழ் சென்று விட்டது.

இதனால் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் விவசாயம் செய்யாமல் தரிசாக கிடக்கின்றன. ஏராளமானோர் வேலைக்காக கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு சென்று வருகின்றனர். இதற்கு தீர்வாக 3 மாவட்டங்களில் உள்ள குளம், குட்டைகளில், நீர் நிரப்பும் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற கோரி 3 மாவட்ட மக்கள் 60 ஆண்டுகளாக போராடினர்.

இதையடுத்து கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கியது. 24 மாதங்களில் முடிய வேண்டிய பணி 36 மாதம் ஆகியும் நிறைவு பெறாத நிலை உள்ளது. இதற்காக ரூ. 1,862 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வருகிற ஜனவரி 15-ந் தேதி அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் வெள்ளோட்டம் விடப்படும் என அறிவித்துள்ளார். இதுகுறித்து அன்னூர் பகுதியில் உள்ள அத்திக்கடவு திட்ட ஆர்வலர்கள் கூறியதாவது:-

இந்தத் திட்டத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, மாவட்டங்களில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 32 குளங்கள், ஊராட்சி ஒன்றியங்களுக்கு சொந்தமான 42 குளங்கள் மற்றும் 971 குட்டைகள் என 1045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பப்பட உள்ளது. ஒரு ஆண்டுக்கு 1.5 டி.எம்.சி. நீர் இந்த குளங்களில் நிரப்பப்படும். குளங்களுக்கு நீரை கொண்டு செல்ல கோவை மாவட்டத்தில் அன்னூரை அடுத்த குன்னத்தூராம் பாளையத்தில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் எம்மாபூண்டி, போல நாயக்கன்பாளையம், திருவாச்சி, நல்ல கவுண்டம்பாளையம், பவானி ஆகிய 5 இடங்களில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டது. இத்திட்டத்தில் 98 சதவீத பணிகள் முடிந்து விட்டது என அத்திக்கடவு திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் அன்னூர் ஒன்றியத்தில் 140 ஏக்கர் பரப்பளவு உள்ள காட்டம்பட்டி குளம், 119 ஏக்கர் பரப்பளவு உள்ள அன்னூர் குளம், 80 ஏக்கர் பரப்பளவு உள்ள கரியாம்பாளையம் குளம் 60 ஏக்கர் பரப்பளவு உள்ள கெம்பநாயக்கன்பாளையம் குளம் மற்றும் 50 ஏக்கர் பரப்பளவு உள்ள கஞ்சப்பள்ளி குளம் உள்பட பெரும்பாலான குளங்களில் குப்பை மலை போல் குவிந்து கிடக்கின்றன. ஊராட்சிகள் சேகரிக்கும் கழிவுகள் இங்கு கொட்டப்படுகின்றன.

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் மூலம் நீர் கொண்டு வரப்பட்டு குளத்தில் நீர் நிரப்பப்பட்டால் நீர் வெளியே செல்லாமல் இருக்க கரைகள் ஒழுங்குபடுத்தப்படவில்லை.மதகுகள் அமைக்கப்படவில்லை. மேலும் குளத்தில் அத்திக்கடவு நீர் நிரப்பப்பட்டால் அத்துடன் கழிவு நீர் கலக்காமல் இருக்க உரிய வசதிகள் செய்யப்படவில்லை.

இதனால் 60 ஆண்டு காலம் போராடி பெற்ற திட்டத்தின் மூலம் குளங்களுக்கு வரும் நீர் குப்பைகளுடனும் கழிவு நீருடனும் கலந்தால் அந்த நீர் விவசாயத்திற்கோ கால்நடைகளுக்கோ பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே குளங்களை சுத்தப்படுத்த வேண்டும்.

இவ்வாறு திட்ட ஆர்வலர்கள் தெரிவித்தனர். கடந்த ஓராண்டாக இதுகுறித்து உள்ளாட்சி அமைப்புகளிடம் தொடர்ந்து கூறி குளங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். குளங்களில் குப்பை கொட்ட கூடாது. குளங்களின் கரைகளை ஒழுங்குபடுத்தி மதகுகள் அமைத்து குளங்களை ஆழப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளோம். இன்னும் சில நாட்களில் வெள்ளோட்டம் விடப்பட உள்ள நிலையில் இந்த பணிகளை செய்ய முடியுமா? என்று தெரியவில்லை.மாவட்ட நிர்வாகம் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.   

Tags:    

Similar News