உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

ரூ.5கோடி பின்னலாடைகளை ஆவணமின்றி கைப்பற்றிய வெளிநாட்டு வர்த்தகர்கள் - விழிப்புணர்வுடன் செயல்பட ஏற்றுமதியாளர்களுக்கு அறிவுறுத்தல்

Published On 2022-07-29 08:53 GMT   |   Update On 2022-07-29 08:53 GMT
  • ஏற்றுமதி வர்த்தகத்தில் பில் ஆப் லேடிங்'(பி.எல்.,) என்ற ஆவணம் முக்கியமானது.
  • இறக்குமதியாளர் ஆடைக்கான தொகையை வங்கியில் செலுத்தி பி.எல்., ஆவணத்தை பெறவேண்டும்.

திருப்பூர் :

திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் உலகளாவிய வர்த்தகர்களிடம் ஆர்டர் பெற்று பின்னலாடைகளை தயாரித்து அனுப்புகின்றன. ஏற்றுமதி வர்த்தகத்தில் பில் ஆப் லேடிங்'(பி.எல்.,) என்ற ஆவணம் முக்கியமானது. ஏற்றுமதி நிறுவனம் ஆர்டர் சார்ந்த முழு விவரங்கள் அடங்கிய பி.எல்., ஆவண தொகுப்பை வங்கியில் ஒப்படைக்கிறது.

இறக்குமதியாளர் ஆடைக்கான தொகையை வங்கியில் செலுத்தி பி.எல்., ஆவணத்தை பெறவேண்டும். ஆவணத்தை வழங்கினால் மட்டுமே கப்பல் சரக்கு கையாளும் நிறுவனம் ஏற்றுமதியாளர் அனுப்பிய சரக்குகளை இறக்குமதியாளர் வசம் ஒப்படைக்கவேண்டும் என்பது விதிமுறை.

இது குறித்து திருப்பூர் ஆர்பிட்ரேசன் கவுன்சில் தலைவர் கருணாநிதி, உறுப்பினர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:-

சில கப்பல் சரக்கு முகமை நிறுவனங்கள், ஆவண விதிகளை மீறுகின்றன. தொகை செலுத்திய விவரங்களுடன் கூடிய பி.எல்., ஆவணத்தை பெறாமலேயே ஆடைகளை இறக்குமதியாளரிடம் வழங்கி விடுகின்றன. சரக்கு கையாளும் நிறுவனமும் வெளிநாட்டு வர்த்தகர்களும் கூட்டணி சேர்ந்தால் மட்டுமே இத்தகைய மோசடிகள் சாத்தியம்.

திருப்பூரில் 10 ஏற்றுமதி நிறுவனங்கள் அனுப்பிய மொத்தம் 5 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகளை, பி.எல்., ஆவணமின்றி அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி நாட்டு வர்த்தகர்கள் கைப்பற்றியது தெரியவந்துள்ளது. இதில் பல்லடத்தை சேர்ந்த ஒரே ஏற்றுமதி நிறுவனம் மட்டும் 1.25 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகளை பறிகொடுத்துள்ளது. ஆவணமின்றி ஆடைகளை கைப்பற்றிக்கொள்ளும் வெளிநாட்டு வர்த்தகர்கள், தொகையை வழங்காமல் இழுத்தடிக்கின்றனர்.

ஏற்கனவே ஆய்வுக்கு உட்படுத்தி அனுப்பியபோதும், தரம் சரியில்லை என சாக்குபோக்கு கூறி, விலையை குறைக்கின்றனர். இதனால், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுகிறது.சட்டரீதியாக போராடி, வெளிநாட்டு வர்த்தகர்களிடம் இருந்து தொகையை பெறுவதற்குள் நிறுவனம் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடும்.

ஏற்றுமதி நிறுவனங்களுக்கு உரிய தொகையை பெற்றுத்தருவதற்காக ஆர்பிட்ரேசன் கவுன்சில் மூலம் சரக்கு கையாளும் நிறுவனங்கள் வெளிநாட்டு வர்த்தகர்கள் மற்றும் உள்ளூரில் இயங்கும் வர்த்தக முகமை நிறுவனத்தினரிடம் பேச்சு நடத்திவருகிறோம்.பின்னலாடை ஏற்றுமதியாளர் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். ஆர்டர்களுக்கு தவறாமல் இ.சி.ஜி.சி., எனப்படும் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News