உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

யூரியா உரம் வாங்கும் போது மற்றொரு உரத்தை வாங்க வற்புறுத்தும் உரக்கடை உரிமையாளர்கள் - நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

Published On 2022-11-13 08:51 GMT   |   Update On 2022-11-13 08:51 GMT
  • உரக்கடைகளை நாடி உரம் வாங்கி பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.
  • உரக்கடைகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பூர் :

குன்னத்தூரில் யூரியா உரம் வாங்க சென்ற விவசாயிகளிடம் மற்றொரு உரத்தை வாங்க வற்புறுத்திய உரக்கடை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி, குன்னத்தூர் வட்டாரங்களில் சோளப்பயிர் தற்போது முளைத்து வளரத் தொடங்கியுள்ளது. தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி யூரியா உரம் சீராக கொடுத்தால் பயிர் நல்ல வளர்ச்சி அடையும் என்று விவசாயிகள் எண்ணி, யூரியா உரம் வாங்க அருகில் இருக்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு சென்றால் அங்கு இருப்பு இல்லை.

இந்நிலையில், தனியார் உரக்கடைகளை நாடி உரம் வாங்கி பயன்படுத்த முயற்சிக்கின்றனர். குன்னத்தூரில் உள்ள உரக்கடைக்கு, விவசாயிகள் யூரியா உரம் வாங்க சென்றால், அங்கு பணியாளர் யூரியா உரம் தனியாக தர முடியாது. மற்றொரு உரமும் சேர்ந்து வாங்கினால்தான் தர முடியும். இல்லையென்றால் இரண்டுக்கும் சேர்ந்து ரூ.1100 கொடுத்தால்தான் யூரியா 1 மூட்டை தருவேன் என்று கறாராக சொல்லி அனுப்பிவிட்டார். இது போன்று விவசாயிகள் பலரும் ஏமாற்றப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக முறையிட்டபோது, யாரிடம் வேண்டுமானால் புகார் அளித்து கொள்ளுங்கள் என பேசினார். யூரியா உரம் கேட்டுச்செல்லும் விவசாயிகளிடம் தேவையற்ற பொருட்களை வாங்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிற உரக்கடைகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தேவையான உரங்கள் இருப்பு வைத்து, விவசாயிகளுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்துக்கும், வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கும் புகார் அனுப்ப உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News