உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

உரிய விலை இல்லாததால் உடுமலையில் விளைந்த தக்காளியை சாலையில் வீசும் விவசாயிகள்

Published On 2023-09-06 12:55 IST   |   Update On 2023-09-06 12:55:00 IST
  • அதிக அளவு விவசாயிகள் தக்காளி சாகுபடி மேற்கொண்டனர்
  • தோல் பகுதியில் வெம்பியும் பெரும்பாலான பழங்கள் அழுகி பெருமளவு சேதமடைந்து வருகின்றன

உடுமலை : 

உடுமலை பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. நடப்பாண்டு கோடை கால மழை மற்றும் தென்மேற்கு பருவ மழை ஏமாற்றியதால் விவசாயிகள் சாகுபடி மேற்கொள்ளவில்லை.இந்நிலையில் 2 மாதத்திற்கு முன் தக்காளி வரத்து குறைந்து ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் வரை விற்றதால் அதிக அளவு விவசாயிகள் தக்காளி சாகுபடி மேற்கொண்டனர்.60 நாட்களுக்குள் அறுவடை துவங்கிய நிலையில் மழை பெய்யாமல் கடும் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது.

அதிக வெப்பம் காரணமாக காய் பிடிப்பது குறைந்து, தக்காளி பழங்கள் மிகவும் சிறியதாகவும், தோல் பகுதியில் வெம்பியும் பெரும்பாலான பழங்கள் அழுகி பெருமளவு சேதமடைந்து வருகின்றன.இந்நிலையில் விவசாயிகள் சாகுபடி செய்த போது 14 கிலோ பெட்டி 2,400 ரூபாய் வரை விற்ற நிலையில் வரத்து அதிகரிப்பால் கடும் விலை சரிவை சந்தித்துள்ளது.

தற்போது உடுமலை சந்தையில் 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி குறைந்த பட்ச விலையாக ரூ.50க்கும், அதிகபட்சமாக ரூ.230க்கும் மட்டுமே ஏலம் போனது. வெயிலின் தாக்கம் மற்றும் விலை சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் விளைந்த தக்காளி பழங்களை ரோட்டில் கொட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

விலை அதிகரித்ததால் கூடுதல் வருவாய் எதிர்பார்த்து, தக்காளி சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. பருவ மழை காலத்தில் மழை பொய்த்து கோடை வெயிலை விட அபரிமிதமான வெயில் அடிப்பதால் தக்காளி செடிகள் கருகியும், பழங்கள் அழுகியும், நோய் தாக்கியும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை கடும் சரிவை சந்தித்து தரமான தக்காளி மட்டுமே விற்பனையாகிறது.இதனால், தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Tags:    

Similar News