உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

விவசாயிகள் சொத்து ஆவணங்களை பதிவு செய்து மீண்டும் பெறலாம் - வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தல்

Published On 2022-11-30 07:56 GMT   |   Update On 2022-11-30 07:56 GMT
  • பி.எம். கிசான் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
  • விவசாயிகள் ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் உதவித்தொகை பெற்று வந்துள்ளனர்.

மடத்துக்குளம் :

விவசாயம் என்னும் உணவு உற்பத்தித்தொழிலை மேற்கொண்டு வரும் விவசாயிகளை கவுரவப்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு துணையாக அரசின் உதவிக்கரம் உள்ளது என நம்பிக்கையளிக்கும் வகையிலும் மத்திய அரசின் மூலம் பி.எம். கிசான் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் இந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் பலன் பெற தகுதியற்ற விவசாயிகளுக்கு பணம் சென்று சேர்வதைத் தடுக்கும் விதமாக சமீபத்தில் ஆதார் இணைப்பு மற்றும் நில ஆவணங்கள் இணைப்பு உள்ளிட்ட புதிய நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் முறையான ஆவணங்கள் இணைக்காத விவசாயிகளுக்கு தற்போது உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு மீண்டும் உதவித்தொகை கிடைக்குமா என்ற கேள்வி விவசாயிகளுக்கு எழுந்துள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட வேளாண்மைத்துறையினர் கூறியதாவது:- தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நிதி உதவி சென்று சேர வேண்டும் என்ற அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உடுமலை வட்டாரத்தில் தற்போது 6 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், மடத்துக்குளம் வட்டாரத்தில் 5 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட விவசாயிகளும் இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் பெற்று பயனடைந்து வருகிறார்கள்.

தற்போது உதவித்தொகை நிறுத்தப்பட்ட விவசாயிகள் தங்களது சொத்து ஆவணங்களை வேளாண்மைத்துறையினரிடம் வழங்கி பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பொது சேவை மையங்களுக்கு சென்று ekyc பதிவு செய்யாத விவசாயிகள் ஆதார் மற்றும் மொபைல் கொண்டு சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு சில விவசாயிகள் ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் உதவித்தொகை பெற்று வந்துள்ளனர்.

இதனால் இருவருக்கும் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் விட்டுக் கொடுப்பதாக எழுதிக் கொடுக்கும்போது மீதம் உள்ளவருக்கு உதவித்தொகை வருவதற்கு வாய்ப்புள்ளது. உதவித்தொகை வராத விவசாயிகள் வேளாண்மைத்துறை அலுவலகத்துக்கு வந்து சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News