திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள் 7-ந் தேதி தொடங்குகிறது
- வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் கலைத்திருவிழாவில் பங்கேற்க உள்ளனர்.
- மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும்.
திருப்பூர் :
மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையிலும், அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையிலும் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா நடத்தப்படுகிறது. அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கலைசார்ந்த பயிற்சிகளும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகளும் நடத்தப்படவுள்ளது. பள்ளி அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, வட்டார அளவில் தொடங்கி நடந்து வருகிறது. வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் கலைத்திருவிழாவில் பங்கேற்க உள்ளனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டத்தின் அமைச்சர்கள், கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஊராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகியோர் பங்கேற்க செய்ய வேண்டும். மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், வருகிற 7 மற்றும் 9-ந் தேதிகளில் காலை 9 மணிக்கு போட்டிகள் தொடங்கும் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.