உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாமில் புதிய உறுப்பினர் படிவங்களை மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.விடம் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. வழங்கிய போது எடுத்த படம்.

திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் - பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பங்கேற்பு

Published On 2023-06-19 08:45 GMT   |   Update On 2023-06-19 08:45 GMT
  • வீட்டுவரி உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி ஏற்றம் ஆகியவை மக்களின் தலையில் மிகப்பெரிய பாரமாகும்.
  • தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக 57 சதவீத மின் கட்டணம் உயர்ந்துள்ளது.

 திருப்பூர் :

திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி, நெருப்பெரிச்சல் பகுதிக்குட்பட்ட பாண்டியன்நகரில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட துணை செயலாளர் பூலுவப்பட்டி பாலு, நெருப்பெரிச்சல் பகுதி செயலாளர் பட்டுலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரிடம் உறுப்பினர் சேர்க்கை படிவங்களை விஜயகுமார் எம்.எல்.ஏ. வழங்கினார். முடிவில் வட்ட செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி செயலாளர் சுந்தராம்பாள், பகுதி நிர்வாகிகள் இம்மானுவேல், ரேவதி, கலா, பகுதி துணை செயலாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வீட்டுவரி உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி ஏற்றம் ஆகியவை மக்களின் தலையில் மிகப்பெரிய பாரமாகும். இதைப்பற்றி எல்லாம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினோ, அமைச்சர் உதயநிதியோ மற்ற தி.மு.க.வினரோ சிந்திக்கவில்லை. இவர்களின் ஒரே சிந்தனை செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். செந்தில்பாலாஜி எதையாவது சொல்லி விட்டால் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு பாதிப்பு வந்துவிடும் என்று முதல்-அமைச்சர் பதற்றமாக உள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக 57 சதவீத மின் கட்டணம் உயர்ந்துள்ளது. கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.வுக்கு 53 ஆண்டுகால வரலாறு உண்டு. மிகப்பெரிய சோதனைகளை எல்லாம் வென்றுள்ளோம். எனவே யாரும் எங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை. 1½ கோடி தொண்டர்களின் விருப்பம் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என்பதாகும். எனவே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் வேட்பாளராகவும், கட்சியின் தலைவராகவும் ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும். இதில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின்போது மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சி.எஸ்.கண்ணபிரான் உடனிருந்தார்.

Tags:    

Similar News