உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

வெள்ளக்கோவில் கிளைக்கு 10 சுற்று தண்ணீர் பாசனத்திற்கு நடவடிக்கை - ஆலோசனை கூட்டத்தில் முடிவு

Published On 2023-08-25 15:25 IST   |   Update On 2023-08-25 15:25:00 IST
  • கடைமடை பகுதியாக உள்ள வெள்ளக்கோவில் சுற்றுவட்டார பகுதிக்கு, தண்ணீர் வந்து சேர்வதில்லை
  • கிளை வாய்க்காலில் குப்பை, இறந்த கோழிகள் வீசுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காங்கயம்:

பி.ஏ.பி., பாசன திட்டத்தில் கடைமடை பகுதியாக உள்ள வெள்ளக்கோவில் சுற்றுவட்டார பகுதிக்கு, தண்ணீர் வந்து சேர்வதில்லை என்ற விவசாயிகளின் தொடர் ஆதங்கம் எதிரொலியாக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தினர் சுல்தான்பேட்டை துவங்கி பொங்கலூர், காங்கயம், வெள்ளகோவில் வரை விரிவான கள ஆய்வு நடத்தினர்.

இதில் காங்கயத்தில் கால்வாயின் இருபுறமும் திடக்கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளன. கால்வாய் மற்றும் கரையோரங்களில் மதுபாட்டில், பிளாஸ்டிக் பை அடைந்து கிடப்பதால் நீர்வழித்தடம் தடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக கால்வாயில் திறந்து விடப்படுகிறது. பல ஆண்டுகளாக சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் மற்றும் திடக்கழிவுகள், கால்வாயில் வெளியேற்றப்படுவதால், நீரின் தரம் மற்றும் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிப்படைந்துள்ளது என அறிக்கை சமர்ப்பித்தனர்.

இதனால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பாசனத்தில் விதிமீறல்களை சரி செய்து 4வது மண்டலத்துக்கு குறைந்தபட்சம் 10 சுற்று தண்ணீர் பாசனத்திற்கு வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். காண்டூர் கால்வாய் அடைப்பு நீக்க நடவடிக்கை எடுப்பது,அடுத்து வரும் 4வது மண்டலத்துக்கு அரசாணை பெறும் போது நீர் வளத்துறையின் செலவினம், நீர் பரிமாற்ற இழப்பு ஆகியவற்றை கருத்துருவில் தெளிவாக குறிப்பிட்டு நீர் வினியோகிக்க நடவடிக்கை எடுப்பது.

கிளை வாய்க்காலில் குப்பை, இறந்த கோழிகள் வீசுவதை தவிர்க்க நடவடிக்கை எடுப்பது, காலாவதியான பாசன சபை வாக்காளர் பட்டியலை சரி செய்வது, கிளை வாய்க்கால் பராமரிப்பு, கால்வாய் ஓரம் கம்பிக்கட்டி, கான்கிரீட் தடுப்பு அமைப்பது, பரம்பிக்குளம், சோலையாறு அணை பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர், முதன்மை பொறியாளர் ஆகியோர் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதை கண்டித்து, வெள்ளக்கோவில் கிளை (காங்கயம் - வெள்ளகோவில்) நீர் பாதுகாப்பு சங்கத்தினர் கூட்டத்தை புறக்கணித்தனர்.

தங்களது கோரிக்கையை முன்வைத்து பட்டினி போராட்டம் நடத்துவது எனவும் முடிவெடுத்துள்ளனர்.

Tags:    

Similar News