உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

300 ஆண்டுகள் பழமையான தம்பிரான் கல்வெட்டு - தொல்பொருள் ஆராய்ச்சி துறையினர் ஆய்வு செய்வார்களா?

Published On 2022-10-01 12:24 IST   |   Update On 2022-10-01 12:24:00 IST
  • மலை வாழ் மக்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
  • பழனி ஆயக்குடி பகுதியில் இருந்து குறிப்பிட்ட சமுதாய இன மக்கள் இங்கு வந்து வழிபட்டு செல்வது வழக்கம்.

மூலனூர் :

திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள இல்லியம்பட்டி கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தம்பிரான் கல்வெட்டு உள்ளது. சுமார் 4-அடி உயரமும் 2- அடி அகலமும் உள்ள இந்த கல்வெட்டு இப்பகுதி மக்களால் தம்பிரான் கல்வெட்டு என அழைக்கப்படுகிறது.

இந்த கல்வெட்டில் மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்களின் வீரத்தை விவரிக்கும் வகையில் வில் அம்பு மற்றும் மான் , பசு போன்ற விலங்குகள் மலை வாழ் மக்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இதற்கு ஆதாரமாக ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் குறிஞ்சி நிலப்பகுதியான பழனி ஆயக்குடி பகுதியில் இருந்து குறிப்பிட்ட சமுதாய இன மக்கள் இங்கு வந்து வழிபட்டு செல்வது வழக்கம். இப்பகுதியில் வசிக்கும் முதியவர் ராமசாமி இந்த தகவலை தெரிவித்தார்.

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு வரை பனை ஓலை வைத்த குடிசையில் இந்த கல்வெட்டு இருந்ததாகவும் பின்னர் கூரை அமைத்து வழிபாடு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த கல்வெட்டை தொல்பொருள் ஆராய்ச்சி துறையினர் ஆய்வு மேற்கொண்டால் இதன் பழமைகள் தெரிய வரும் என்றும் வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

Tags:    

Similar News