உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

மின்கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யக்கோரி திருப்பூரில் 25-ந்தேதி உற்பத்தி நிறுத்த போராட்டம்

Published On 2023-09-22 10:19 GMT   |   Update On 2023-09-22 10:19 GMT
  • தொழில் நிறுவனங்களுக்கு 430 சதவீதம் உயர்த்திய நிலை மின்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும்.
  • மல்டி இயர் டேரிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

திருப்பூர்:

தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பின் சார்பாக திருப்பூரில் உள்ள அனைத்து தொழில் அமைப்பு சங்க நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் நிட்மா இணை செயலாளர் கோபி, டீமா தலைவர் முத்துரத்தினம், டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த், பல்லடம் கோவிந்தராஜூ ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சைமா, நிட்மா, டீமா, டெக்பா, சிம்கா, நிட்டிங், காம்பாக்டிங், பிரண்டிங், எம்ப்ராய்டரி உள்ளிட்ட சார்பு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொழில் நிறுவனங்களுக்கு 430 சதவீதம் உயர்த்திய நிலை மின்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். பீக்ஹவர் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். 3பியில் இருந்து 3 ஏ1 நடைமுறைக்கு மாற்றி சிறு, குறு நிறுவனங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மல்டி இயர் டேரிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

2 ஆண்டுகளுக்கு மின்கட்டண உயர்வை தவிர்க்க கோரியும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யக்கோரியும் தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகிற 25-ந் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் தொழில் அமைப்பின் சார்பில் செய்யப்பட உள்ளது.

இதையொட்டி துண்டுபிரசுரங்கள், பேனர்கள், விளம்பர பலகைகள் அமைத்து வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. அனைத்து சங்கங்களும் இந்த வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்துக்கு வணிகர்கள், ஓட்டல் சங்க உரிமையாளர்கள், பொதுநல அமைப்புகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் 2000 பவர்டேபிள் நிறுவனங்கள் பங்கேற்கும் என பவர்டேபிள் சங்க செயலாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News