தேசிய அளவில் தங்கம் வென்ற வாலிபால் வீரர்.
மனநலம் பாதிக்கப்பட்ட தந்தை சிகிச்சைக்கு உதவி செய்ய அரசிடம் வாலிபால் வீரர் கோரிக்கை
- தேசிய அளவிலான போட்டியில் தங்கம் வென்றவர்
- வேலைக்கு சென்று பணத்தை சேர்த்து விளையாடி வருகிறார்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த திருப்பதி (வயது 57) இவரது மகன் அசோக்குமார் (வயது 23) இவர் பள்ளி பருவ காலத்திலிருந்து வாலிபால் விளையாட்டின் மீது கொண்டிருந்த ஆர்வத்தினால் பள்ளி காலத்திலேயே பயிற்சி பெற்று பள்ளி அளவிலான போட்டிகளிலும் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகளிலும் வெற்றி பெற்று பரிசுகளை வென்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது தந்தை நோய்வாய்ப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். கல்லூரி படிப்பை முடித்த அசோக்குமார் கல்லூரி படிக்கும் போதும் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றதால் மாநில அளவில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
கேரளாவில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் சிறப்பாக விளையாடி கேரளா அணியை (24 -21) என்ற வித்தியாசத்தில் தோற்கடித்து தனது தனி திறமையால் தேசிய அளவில் விளையாடுவதற்கு தகுதி பெற்றார்.
கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் சுமார் 15 அணிகள் கலந்து கொண்டன கோவா அணியை (24-17) என்ற வித்தியாசத்தில் அணியை வெற்றி பெற செய்து தங்கப்பதக்கம் பெற்றார்.
வறுமையின் காரணமாக நேபாளத்தில் நடைபெறும் உலக அளவிலான கைப்பந்து போட்டியில் அசோக்குமார் பங்கேற்க முடியாமல் தவித்து வந்துள்ளார் இது குறித்து தகவல் அறிந்த அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் மற்றும் அவரது நண்பர்கள் நிதியுதவி செய்து அசோக்கை நேபாளத்தில் நடைபெறும் பயிற்சி வகுப்பு மற்றும் போட்டியில் பங்கேற்க அனுப்பி வைத்துள்ளனர்.
நேபாளத்தில் நடைபெற்ற தேசிய அளவிலன போட்டியில் சுமார் ஆறு நாடுகள் கலந்து கொண்டன இதில் இறுதியாக நேபால் அணியை (24-19) என்ற விகிதத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்
அசோக் குமார் ஒவ்வொரு முறையும் நேபாளத்திற்கு சென்று வர 40 ஆயிரம் ரூபாய் வரை பணம் செலவாகி வருவதாகவும் இதனால் வேலைக்கு சென்று பணம் சம்பாதித்து கைப்பந்து விளையாட செல்லும் சூழ்நிலைக்கு தல்லப்பட்டுள்ளார்.
அவ்வப்போது கிடைக்கும் வேலைகளை செய்து வரும் வருமானத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தந்தையின் மருத்துவச் செலவிற்கும் கல்லூரி படித்து வரும் தம்பியின் படிப்புச் செலவிற்குமே பணம் போதவில்லை எனவும் தேசிய அளவிலும் உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அரசு சார்பில் மனநலம் பாதிக்கப்பட்ட தனது தந்தையின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் எனவும் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.