திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்புகள் அகற்றப்பட்டதை சி.என்.அண்ணாதுரை எம்பி, எம்எல்ஏக்கள் நல்லதம்பி, தேவராஜ், நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு வாகனங்களை அந்த வழியாக அனுப்பி வைத்தனர்.
நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் அகற்றம்
- பொதுமக்கள் மகிழ்ச்சி
- மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டு
திருப்பத்தூர்:
வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் வழியாக ஊத்தங்கரை வரை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை ரூ 300 கோடியில் அமைக்கப்பட்டது.
இதனால் இருபுறமும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டது திருப்பத்தூர் நகரத்தில் பல ஆண்டுகளாக தாலுகா அலுவலகம் எதிரே வாகனங்கள் வளைந்து செல்லவும் தாலுகா அலுவலகம் வட்டார வளர்ச்சி அலுவலகம் தீயணைப்பு நிலையம் போலீஸ் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அரசு பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர பொதுமக்கள் நகர காவல் நிலையம் அருகே பஸ் நிலையம் அருகே சென்று அல்லது புதுப்பேட்டை ரோடு அருகே சென்று திரும்ப வேண்டிய நிலை இருந்தது.
இதனால் இருபுறமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து திருப்பத்தூரில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள் வர்த்தக சங்கம், அனைத்து தொண்டு நிறுவனங்கள் நல்லதம்பி எம்.எல்.ஏ. தலைமையில் நேரில் சென்று கலெக்டரிடம் திருப்பத்தூர் பகுதிக்கு தினமும் பல்லாயிரம் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் தாலுக்கா அலுவலகம் எதிரே உள்ள இரும்பு தடுப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனை ஏற்று மாவட்ட நிர்வாகம் உடனடியாக போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமனம் செய்து அந்த பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் இது குறித்து அறிக்கை கலெக்டரிடம் தாக்கல் செய்யப்பட்டு அந்தப் பகுதிகளில் உள்ள இரும்பு தடுப்புகளை அகற்றி பொதுமக்கள் தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அரசு பள்ளிக்கு செல்லவும் வாகனங்கள் வளைந்து சென்று திரும்பவும் ஏற்பாடு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனை சி.என். அண்ணாதுரை எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் நல்லதம்பி, தேவராஜ், தி.மு.க நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன், நேரில் சென்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
இதனால் திருப்பத்தூர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.