காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
- ஆஸ்பத்திரியில் உறவினர்கள் முற்றுகை
- கணவரிடம் விசாரணை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள மட்றப் பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது 23) கட்டிட வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு சத்யமங்கலம் தனியார் கம்பெனியில் வேலை பார்த்தார். அப்போது உளுந்தூர்பேட்டை கிராமத்தை சேர்ந்த ஆதிலட்சுமி (19 )என்பவரை காதலித்தார்.
இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் மட்றப்பள்ளி கிராமத்தில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் சூர்யா வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கினார். ஆதிலட்சுமி வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காலையில் வழக்கம் போல வீட்டின் கதவை தட்டி திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ஆதிலட்சுமி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆதிலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த ஆதிலட்சுமியின் உறவினர்கள் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள் ஆதிலட்சுமி சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் பிரேத பரிசோதனை முடிவு கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். திருமணமாகி ஒரு வருடமே ஆவதால் இது குறித்து உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆதிலட்சுமி அவருடைய கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.