உள்ளூர் செய்திகள்

திருச்செங்கோடு அருகே 2 மகன்கள் தேர்வில் தோல்வி- தந்தை தற்கொலை

Published On 2025-05-22 17:41 IST   |   Update On 2025-05-22 17:41:00 IST
  • மகன்கள் 2 பேரும் தேர்வில் தேர்ச்சி பெறாததால் மனம் உடைந்து தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • தகவல் அறிந்த திருச்செங்கோடு போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த ஆன்றாபட்டி அருகே உள்ள குப்பாண்டாம் பாளையம் ஊராட்சி வன்னியர் கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் கபில் ஆனந்த் (வயது 41) லாரி டிரைவர்.

இவருக்கு நதியா என்ற மனைவியும், ஹரி ரஞ்சித், விக்னேஷ் ஆகிய 2 மகன் உள்ளனர்.

திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் ஹரி ரஞ்சித், அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் விக்னேஷ் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொது தேர்வுகளில் தோல்வி அடைந்தனர். தனது இரு மகன்களும் தேர்ச்சி பெறாததால் மன வருத்தத்தில் கபில் ஆனந்த் இருந்து வந்தார்.

தான் படிக்கவில்லை என்றாலும் தனது மகன்களாவது படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்த கபில் ஆனந்த் மகன்கள் தேர்வில் தோல்வி பேரதிர்ச்சியாக இருந்தது. இதுகுறித்து நேற்று மாலை வீட்டிலிருந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென வீட்டுக்குள் சென்ற கபில் ஆனந்த் கதவை சாத்திவிட்டு கொக்கியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனைவி கதறி அழுத சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து கடப்பாறை கொண்டு கதவை உடைத்து கபில் ஆனந்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கபில் ஆனந்த் ஏற்கனவே இறந்துவிட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் அறிந்த திருச்செங்கோடு போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தனது மகன்கள் 2 பேரும் தேர்வில் தேர்ச்சி பெறாததால் மனம் உடைந்து தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆன்றாபட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News