திருக்கழுக்குன்றம் பைபாஸ் சாலையில் அடுத்தடுத்து மூன்று டாஸ்மாக்.. விபத்து நடப்பதால் மக்கள் அச்சம்
- வளைவு பகுதியில் டாஸ்மாக் இருப்பது தெரியாமல் வேகமாக வரும் வாகனங்கள் கவிழ்ந்து விழுந்த சம்பவங்களும் நடந்துள்ளது.
- விடுமுறை நாட்களில் கூடுதல் கூட்டம் காணப்படுவதால் அந்த வழியாக செல்வதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் கொத்திமங்கலம் பைபாஸ் சாலையின் முக்கிய வளைவு பகுதியில் அடுத்தடுத்து, மூன்று டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இங்கு மாலை நேரத்தில் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி விட்டு மது வாங்க டாஸ்மாக் செல்லும் குடிமகன்களால் விபத்துகள் நடந்து வருகிறது.
சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் கூடுதல் கூட்டம் காணப்படுவதால் அந்த வழியாக பொது மக்களும், வாகன ஓட்டிகளும் செல்வதற்கே அச்சப்படும் நிலை உள்ளது.
செங்கல்பட்டில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கல்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி செல்லும் முக்கிய சாலையாக கொத்திமங்கலம் பைபாஸ் இருப்பதால், வளைவு பகுதியில் டாஸ்மாக் இருப்பது தெரியாமல் வேகமாக வரும் கனரக வாகனங்கள் நிலை தடுமாறி கவிழ்ந்து விழுந்த சம்பவங்களும் நடந்துள்ளது. மோட்டார் சைக்கிள் விபத்துக்களும் அடிக்கடி நடக்கிறது. இதனால் அப்பகுதி டாஸ்மாக் கடையை ஊருக்கு வெளியே மாற்றும்படி அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.