உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் கும்பல்- அதிரடி வேட்டையில் 3 பேர் கைது

Published On 2022-07-19 16:05 IST   |   Update On 2022-07-19 16:05:00 IST
  • கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கொரோனா பரவலுக்கு பிறகு வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரையாக பயன்படுத்து கலாசாரம் அதிகரித்து வருகிறது.
  • கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதைக்கு அடிமையாக்கும் கும்பலை பிடிக்க போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

குனியமுத்தூர்:

கோவையில் ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் கோவைக்கு வந்து தங்கி கல்லூரியில் உள்ள விடுதிகளிலும், வெளியே நண்பர்களுடன் சேர்ந்து அறை எடுத்து தங்கியும் படித்து வருகின்றனர்.

இந்தநிலையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கொரோனா பரவலுக்கு பிறகு வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரையாக பயன்படுத்தும் கலாசாரம் அதிகரித்து வருகிறது.

இதனை பயன்படுத்தும் மாணவர்களை அவ்வளவு எளிதில் பெற்றோர் மற்றும் போலீசார் கண்டுபிடிக்க முடியாது என்பதால் போதை மாத்திரைகள் பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்த மாநகர போலீஸ் சார்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த கும்பலை சேர்ந்த 25-க்கு மேற்பட்டோரை கைது செய்தனர். மேலும் தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர். மருந்துக்கடை உரிமையாளர்களுக்கு டாக்டர்களின் பரிந்துரை கடிதம் இல்லாமல் யாருக்கும் வலி நிவாரணி மாத்திரைகளை விற்க கூடாது என அறிவுரை வழங்கி உள்ளனர். அவ்வாறு விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

இந்தநிலையில் போதை ஊசி போட்ட கல்லூரி மாணவர் ஒருவர் பலியானார். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த மாணவர் கோவையில் தங்கி படித்து வந்தார். அவர் ஆன்லைன் மூலம் கும்பகோணத்தில் உள்ள ஒரு மருந்துக்கடையில் ஆர்டர் செய்து வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி உள்ளார். அந்த மாத்திரைகளை கரைத்து போதைக்காக ஊசி மூலம் தனது உடலில் செலுத்தியபோது இருதய செயலிழப்பு ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி மாணவருக்கு ஆன்லைன் மூலம் மாத்திரை அனுப்பி வைத்த கும்பகோணத்தைச் சேர்ந்த மருந்து கடை உரிமையாளர் முகமது பசீர் என்பவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதைக்கு அடிமையாக்கும் கும்பலை பிடிக்க போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

இந்தநிலையில் குனியமுத்தூர் பகுதியில் சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து குனியமுத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த குனியமுத்தூர் டி.ஏ.எச். காலனியை சேர்ந்த பைசல் ரகுமான் (வயது 24), என்.பி. இட்டேரியை சேர்ந்த பைசல் (28), குறிச்சி பிரிவை சேர்ந்த ரபீக் (26) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்த 53 போதை மாத்திரைகள், 2 செல்போன், ஒரு மோட்டார் சைக்கிள், ரூ.14,600 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

3 பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஆந்திராவை சேர்ந்த சாவர் என்பவர் தங்களுக்கு போதை மாத்திரைகளை அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர். அவரிடம் இருந்து மாத்திரைகளை குறைந்த விலைக்கு வாங்கி அவர்களும் பயன்படுத்தி விட்டு கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தெரிவித்தனர். இதனையடுத்து தற்போது போலீசார் ஆந்திராவில் இருந்து போதை மாத்திரைகளை சப்ளை செய்யும் சாவரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News