துப்புரவு பெண் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.
துப்புரவு பெண் தொழிலாளர்கள் சாலை மறியல்
- அதிகாரிகள் மிரட்டல் விடுப்பதாக புகார்
- போக்குவரத்து பாதிப்பு
செய்யாறு:
செய்யாறு நகராட்சி அலுவலகத்தில் இன்று காலை துப்புரவு தொழிலாளர்கள் திடீரென முற்றுகையிட்டனர்.
அப்போது தங்களுக்கு 3 மாதம் சம்பள பாக்கி உள்ளது. 18 வருடமாக வைப்புதொகை நிலுவையில் உள்ளது. அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டால் மிரட்டல் விடுப்பதாகவும், 462 ரூபாய் சம்பளம் தர வேண்டும் ஆனால் 300 ரூபாய் தருவதாகவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் அங்கிருந்து சென்று செய்யாறு- ஆற்காடு சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து செய்யாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகராட்சி கமிஷனர் ரகுராமன் மற்றும் செய்யாறு சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதின் பேரில் துப்புரவு தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.