உள்ளூர் செய்திகள்

லோன் ஆப் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்

Published On 2023-06-19 14:43 IST   |   Update On 2023-06-19 14:43:00 IST
  • செல்போன் எண்ணிற்கு எவரேனும் பேசி ஓ.டி.பி எண்ணை கேட்டால் கொடுக்க கூடாது
  • திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

திருவண்ணாமலை:

சமூக வலைதளங்களில் போலியான வலைதள பக்கங்கள் மூலமாகவோ ஓ.டி.பி மூலமாகவோ அல்லது இணைய வழியில் வேறு வகையிலோ பணம் திருட்டு உள்ளிட்ட சைபர் கிரைம் குற்றச்சம்பவங்கள் நடக்கின்றன.

இதன் காரணத்தால் பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை பேஸ்புக் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி தங்களின் செல்போன் எண்ணிற்கு எவரேனும் பேசி ஓ.டி.பி எண்ணை கேட்டால் கொடுக்க கூடாது என்றும் சைபர் கிரைம் போலீஸ் தரப்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் பண தேவைகள் அனைத்து தரப்பு மக்களிடம் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.இதனால் நவீன காலத்திற்கு ஏற்ப செல்போன் மூலம் கடன் பெறும் வகையில் லோன் ஆப் செயலிகள் அதிக அளவில் இணையதளத்தில் உலாவி வருகின்றன.

பதிவிறக்கம் வேண்டாம்

இந்த நிலையில் எந்த ஒரு லோன் ஆப் செயலிகளையும் செல்போன்களில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அதில் ஆதார், பான் கார்டு,செல்பி புகைப்படம் ஆகியவற்றை பதிவேற்றக்கூடாது. என்றும்,அதன் மூலம் உங்களது தகவல்கள் திருட வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் 'லோன் ஆப்'மூலமாக கடன் பெறுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கட்டணமில்லா தொலைபேசி எண்

இணையதள பணமோசடி புகார்களை தெரிவிக்க கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1930-ஐ 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். பாதிக்கப்பட்டவர்கள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக புகார் தெரிவிக்கவேண்டும்.

சைபர் கிரைம் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News