பைக் மீது கார் மோதி கட்டிட தொழிலாளி பலி
- பிரேத பரிசோதனைக்காக உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு
- வழக்கு பதிவு செய்து கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்
போளூர்:
போளூர் அடுத்த வெண்மணியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 46). கட்டிட தொழிலாளி.
இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள் உள்ளனர். நேற்று இரவு 7 மணி அளவில் முருகன் பைக்கில் வெண்மணியிலிருந்து வேலை சம்பந்தமாக கரை பூண்டிக்கு சென்றார்.
வேலைகளை முடித்துக் கொண்டு போளூர் -சேத்துப்பட்டு சாலையில் வந்து கொண்டிருந்தார்.
வெண்மணி தனியார் பள்ளி அருகே வரும்போது எதிரே வந்த கார் முருகன் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து போளூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.