திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
- வாலிபரிடம் கீழே இறங்கு மாறு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் இறங்க மறுத்து தொடர்ந்து மிரட்டல் விடுத்தார்.
- போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோவிலில் உள்ள வடக்கு கோபுரம் சுமார் 150 அடி உயரம் கொண்டது.
இந்த நிலையில் நேற்று இரவு கோவிலுக்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென கோவில் கோபுரத்தில் விறு,விறுவென ஏறினார். அவர் கோபுரதத்தின் உச்சிக்கு சென்று தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருக்கழுக்குன்றம் போலீசுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரவித்தனர்.
அவர்கள் அந்த வாலிபரிடம் கீழே இறங்கு மாறு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் இறங்க மறுத்து தொடர்ந்து மிரட்டல் விடுத்தார். சுமார் 4 மணி நேரம் பேச்சு வார்த்தைக்கு பின்னர் கோபுரத்தின் உச்சியில் ஏறிய வாலிபரை போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் பத்திரமாக மீட்டு கீழே அழைத்து வந்தனர்.
விசாரணையில் அவர் திருக்கழுக்குன்றம் வன்னியர் தெருவை சேர்ந்த தினேஷ் (வயது 21) என்பது தெரிந்தது. வெல்டிங் கடையில் வேலை செய்து வருவதும்அவருக்கு சரிவர சம்பளம் தராததால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதாகவும் மேலும் காதல் தோல்வியாலும் மன உளச்சலில் இருந்து வந்ததாகவும் அவர் தெரிவித்து உள்ளார். இதுபற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.