பள்ளி சுவற்றில் வேர்கள் துளைத்தும் காணப்படும் கட்டிடம்.
போடி அருகே பள்ளியின் சுவற்றில் வேர்கள் துளையிட்டு இடியும் அபாயம்
- கொட்டக்குடி உண்டு உறைவிட பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மலைவாழ் பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
- சுவர்களில் நீரேற்றம் காணப்பட்டு எந்த நேரமும் இடிந்து விழலாம் என்ற நிலையிலும் கட்டிடத்தின் ஜன்னல் கதவுகள் முற்றிலும் சேதமடைந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே அமைந்துள்ளது கொட்டக்குடி மலை கிராமம். தமிழகத்திலேயே மிக அதிக வருவாய் ஈட்டி தரக்கூடிய மலைவாழ் ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாக இது உள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலை கிராமத்தைச் சுற்றிலும் குரங்கணி, டாப் ஸ்டேஷன், சென்ட்ரல், முதுவாக்குடி, பிச்சாங்கரை போன்ற பகுதிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் கொட்டக்குடியில் உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் கண்ணாங்கரை கிராமம் மற்றும் கொட்டக்குடி கிராமத்தில் 2 உண்டு உறைவிட பள்ளிகள் இயங்கி வருகின்றன. கொட்டக்குடி உண்டு உறைவிட பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மலைவாழ் பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
இவர்களுக்கு ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் மற்றும் உணவு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக ஒரு நபர் ஆகிய 3 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்காக கட்டப்பட்டுள்ள உண்டு உறைவிட பள்ளி கட்டிடம் தற்போது சிதிலமடைந்து எந்த நேரமும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில்உள்ளது.
மழைக்காலம் இல்லாத தற்போதைய நிலையிலும் மரத்தின் வேர்கள் சுவர்களில் ஊடுருவி இருப்பதால் மேற்கூைரகள் மற்றும் சுற்றுச் சுவர்களில் நீரேற்றம் காணப்பட்டு எந்த நேரமும் இடிந்து விழலாம் என்ற நிலையிலும் கட்டிடத்தின் ஜன்னல் கதவுகள் முற்றிலும் சேதமடைந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
மேலும் கழிப்பறையும் போதிய சுகாதாரம் இன்றி உள்ளது. இதனால் இந்த பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க வரும் பெற்றோர்கள் இந்தக் கட்டிடத்தின் நிலை கண்டு அச்சத்தில் தங்கள் குழந்தைகளை இங்கு சேர்க்காமல் போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். மேலும் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துள்ளனர்.
மழைக்காலம் தொடங்கி விட்டால் என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் இங்கு தங்கி பயிலும் குழந்தைகளும் கற்று தரும் ஆசிரியர்களும் அருகிலுள்ள ஊராட்சி மன்ற கிராம சேவை மையக் கட்டிடத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
தற்போது வகுப்புகள் நடத்துவதற்காக மட்டுமே கிராம சேவை மைய கட்டிடத்தில் தற்காலிகமாக பயன்படுத்தி வரும் நிலையில் சிதிலமடைந்த கட்டிடத்தில் இரவில் தங்கும் குழந்தைகள் அச்சத்துடனேயே உள்ளனர்.
இங்கு பயிலும் குழந்தைகளுக்கு பல்வேறு அரசு சலுகைகள் வழங்கப்பட்டாலும் இப்பகுதியில் இருந்து அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால் பகலில் இங்கிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள குரங்கணி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் மற்ற நேரங்களில் இங்கிருந்து சுமார் 16 கி.மீ தூரத்தில் உள்ள போடி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
சிரக்காடு, சோலையூர், மேலப்பரவு போன்ற பகுதிகளில் வசித்து வரும் பழங்குடியின மக்களும், குரங்கணி மற்றும் அதன் சுற்று மலை கிராமப் பகுதிகளில் உள்ள மலைவாழ் பழங்குடியின மக்களும் தங்கள் குழந்தைகளை இங்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கு மிகுந்த அச்சமும் தயக்கமும் காட்டி வருகின்றனர்.
எனவே உண்டு உறைவிடப்பள்ளியை சீரமைத்து மாணவர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.