உள்ளூர் செய்திகள்

கதவணை அமைக்கும் பணியை முன்னாள் எம்.எல்.ஏ. பி.வி.பாரதி பார்வையிட்டார்.

திருநகரி உப்பனாற்றில் கதவணை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

Published On 2023-08-12 08:59 GMT   |   Update On 2023-08-12 08:59 GMT
  • நிலத்தடி நீரும் உப்பு நீராக மாறி வருவதால் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.
  • கதவணை கட்டும் பணிகள் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கியது.

சீர்காழி:

சீர்காழி அருகே கொண்டல் தலைப்பிலிருந்து உருவாகும் உப்பனாறு கொண்டல், வள்ளுவக்குடி, அகணி, சீர்காழி, சட்டநாதபுரம், பனமங்கலம், திட்டை, தில்லைவிடங்கன், எடமணல், திருநகரி, காரைமேடு, புதுத்துறை, வழுதலைக்குடி வழியாக சென்று திருமுல்லைவாசலில் கடலில் கலந்து வருகிறது.

இந்த உப்பனாறு மூலம் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மேம்பட்டு வந்தது. இந்நிலையில் கோடை காலங்களில் கடல் நீர் உப்பனாற்று முகத்துவாரம் வழியாக 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு உப்புகுந்து நிலத்தடி நீர் முழுதும் பாதிக்கப்பட்டு உவர் நீராக மாறி வருகிறது. இதனால் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீரும் உப்பு நீராக மாறி பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு நபார்டு உலக வங்கி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பணிகள் தொடங்கியது. ரூ. 30 கோடியே 96 லட்சத்தில் திருநகரியில் உப்பனாற்றின் குறுக்கே கதவனை கட்டும் பணிகள் தொடங்கியது.

இப்பணிகள் 18 மாதங்களில் நிறைவடைய வேண்டும். ஆனால் மூன்று ஆண்டுகள் ஆகியும் பணிகள் நிறைவடையாததால் கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுவதை தடுக்க முடியாமல் கேள்விக்குறியாக உள்ளது. சுமார் 240 மீட்டர் நீளத்திற்கு கதவணை அமைக்கப்பட்டு வரும் நிலையில் இதில் 39 ஷட்டர்கள் பொருத்தப்படவுள்ளன.

அவற்றின் 18 ஷட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் மெத்தனமாக ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள், கிராம மக்கள், விவசாயிகள் பாதிப்பு உள்ளாவது தொடர்கதையாக உள்ளது.இதனிடையே இப்பணிகளை முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ. பி.வி. பாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது திருநகரி உப்பனாற்றில் கதவனைக் கட்ட நிதி ஒதுக்கீடு பெற்று கடந்த 2020 ஆகஸ்டு மாதம் பணிகள் தொடங்கியது.

ஆனால் தற்போது ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. எனவே வரும் மழை காலத்திற்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து இதில் தண்ணீரைத் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்போது அக்செப்ட் அமைப்பை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஜெக.சண்முகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News