உள்ளூர் செய்திகள்

மாணவி வர்ஷா.

தோட்ட வேலை பார்த்து கொண்டே 10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி - கலெக்டர் ஆவதே லட்சியம் என்கிறார்

Published On 2022-06-21 09:28 GMT   |   Update On 2022-06-21 09:28 GMT
  • பிளஸ்-2 விலும் நல்ல மதிப்பெண் பெற்று பெற்றோருக்கு பெருமை சேர்ப்பேன் என்றார் வர்ஷா.
  • பள்ளி சென்று வந்ததும் எனது பெற்றோருக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன் என்றார்.

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலப்பட்டினம் வேதம்புதூரை சேர்ந்தவர் சிவன்பாண்டி. இவரது மனைவி சசிகலா.

இவர்களுக்கு வர்ஷா(வயது 15) என்ற மகள் உள்பட 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். சிவன்பாண்டி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சசிகலா பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார்.

இவர்களது மூத்த மகள் வர்ஷா, அதே பகுதியில் பூலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவி வர்ஷா 500-க்கு 474 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

சிவன்பாண்டி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இதனால் அந்த பகுதியில் உள்ள ஒருவரிடம் நிலத்தை குத்தகைக்கு வாங்கி விவசாயம் செய்து வருகிறார். மாணவி வர்ஷா பள்ளிக்கு சென்றுவிட்டு வந்த உடனே வயலுக்கு சென்றுவிடுவார்.

இதுகுறித்து மாணவி வர்ஷா கூறுகையில், எனது அப்பா வேலைக்கு போய்விட்டு இரவு தான் வருவார். இதனால் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருக்கும் தக்காளி, பயிறு வகைகள், நெற்பயிர்களுக்கு நான் தான் தண்ணீர் பாய்ச்சுவேன்.

எங்களுக்கு சொந்தமாக மாடுகள் உள்ளன. அவைகளுக்கு புல் அறுத்து மொபட்டில் வீட்டுக்கு கொண்டு செல்வேன். சில நேரங்களில் மாடுகளில் பால் கறக்கவும் செய்வேன். பள்ளி சென்று வந்ததும் எனது பெற்றோருக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்.

தண்ணீர் பாய்ச்சி கொண்டே தேர்வுக்கு படித்தேன். விடா முயற்சியுடன் படித்ததால் இந்த மதிப்பெண்ணை பெற்றுள்ளேன். இதேபோல் பிளஸ்-2 விலும் நல்ல மதிப்பெண் பெற்று பெற்றோருக்கு பெருமை சேர்ப்பேன்.

என்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்த எனது பெற்றோரை நான் நன்றாக பார்த்து கொள்வேன். கலெக்டராக வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்வதே என் லட்சியம் என்றார்.

Tags:    

Similar News