உள்ளூர் செய்திகள்

பெருமுளை ஊராட்சி செயலாளரை கண்டித்து பெண்கள் முற்றுகையிட்ட காட்சி.

திட்டக்குடி அருகே இன்று காலை 100-நாள் வேலை முறையாக வழங்காததை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

Published On 2023-08-10 09:38 GMT   |   Update On 2023-08-10 09:38 GMT
  • 100-நாள் வேலை திட்டத்தில் முறையாக வழங்கவில்லை
  • தேவையானவர்களுக்கு மட்டும் வேலை வழங்கி வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

கடலூர்:

எழுத்தூர், பெருமுளை பகுதிகளில் முறையாக 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகை. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த எழுத்தூர் கிராமத்தில் சுமார் 2000 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு அங்கு நடைபெறும் ராஜூவ்காந்தி ஊராக 100-நாள் வேலை திட்டத்தில் முறையாக வழங்கவில்லை எனவும், எழுத்தூர் கிராமத்தில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு வறுமை கோடு சான்றிதழ் வழங்காமல் மாடி வீடு, சொத்துக்கள் உள்ளவர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார்கள்.

குறிப்பாக 100 நாள் வேலையில் தலைவர், செயலாளர், வார்டு நபர் உள்ளிட்டோர் அவர்களுக்கு தெரிந்த நபர்கள் மற்றும் உறவினர்களுக்கு வேலை கொடுத்து மற்றவர்களுக்கு முறையாக வேலை வழங்காததை கண்டித்து எழுத்தூர் கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் இன்று காலை ஊராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உங்களுக்கு முறையாக வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியதின்பேரில் அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

இதேபோன்று திட்டக்குடி அடுத்த பெருமுளை ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் நடந்து வருகிறது. இதில் பணியாளர்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு தேவையானவர்களுக்கு மட்டும் வேலை வழங்கி வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். தற்போது 6-வது வார்டு பொதுமக்கள் வேலை செய்யும் நாட்களில் 1-வது வார்டு பொதுமக்களுக்கு வேலை வழங்கியதால் 6-வது வார்டு பொதுமக்கள் ஊராட்சி செயலாளர் சசிகுமாரை இன்று காலை வழிமறித்து முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஊராட்சி செயலாளரிடம் பொதுமக்கள் அனைத்து வார்டில் உள்ள அனைவருக்கும் வேறுபாடு இன்றி முறையாக அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் எனவும். ஊராட்சி பணியாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வரவேண்டும். அலுவலகத்தில் வைத்து தான் அனைவருக்கும் வேலை அட்டை வழங்க வேண்டும், பெருமுளை ஊராட்சியில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பட்டி யலில் பெரும் முறைகேடு கள் நடந்துள்ளது அதனை சரிசெய்ய வேண்டும். என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பொதுமக்கள் ஊராட்சி செயலாளர் சசிக்குமாரை முற்றுகையிட்டனர்.

ஊராட்சி செயலாளர் மற்றும் வார்டு நபர் இருவரும் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். விரைவில் இந்த கோரிக்கைகள் நிறை வேற்றாவிட்டால் மங்களூர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News