உள்ளூர் செய்திகள்

மேரக்காய் கொடிகள் அழுகின; விவசாயிகள் கவலை

Published On 2022-08-15 09:52 GMT   |   Update On 2022-08-15 09:52 GMT
  • கூடலூர் தாலுகா பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
  • விளைச்சல் மூலம் வருவாய் ஈட்டலாம் என விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர்.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் தொடர் கனமழை பெய்தது. இதனால் ஆறுகள் மற்றும் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோர கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் 250-க்கும் மேற்பட்ட மக்கள் தொரப்பள்ளி, புத்தூர் வயல் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

மழையின் தாக்கம் தொடர்ந்து அதிகமாக காணப்பட்டதால் கூடலூர் தாலுகா பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் இஞ்சி, வாழை உள்ளிட்ட விவசாய பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டது.

மேலும் 2 வாரங்களாக சூரிய வெளிச்சம் இல்லாததாலும், தொடர் மழையால் பச்சை தேயிலை விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இந்தநிலையில் மழையின் தாக்கம் குறைந்து பரவலாக வெயில் காணப்படுகிறது.

இதன் காரணமாக விவசாய நிலங்களில் தேங்கி நின்ற தண்ணீர் வழிந்தோடியது. மேரக்காய் அழுகின இந்தநிலையில் கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களான ஸ்ரீமதுரை, முதுமலை ஊராட்சிகள் மற்றும் பாடந்தொரை, கம்மாத்தி, குற்றிமுற்றி, ஒற்றவயல் உள்பட பல்வேறு இடங்களில் பரவலாக மேரக்காய் விவசாயம் நடைபெற்று வந்தது.

இதனிடையே தொடர் கனமழை பெய்ததால் ஏராளமான தோட்டங்களில் பயிரிட்டு இருந்த மேரக்காய் கொடிகள் அழுகி விட்டன. மேலும் சூறாவளி காற்றும் வீசியதால் பல இடங்களில் பந்தல்கள் சரிந்து மேரக்காய் கொடிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

விளைச்சல் மூலம் வருவாய் ஈட்டலாம் என விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் மழையின் தாக்கத்தால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதால், அவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

எனவே, கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களின் விவரங்களை கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News